பாஜகவுக்கு எதைப் பற்றியும் கவலையில்லை - அதற்கு இதுதான் காரணமாம் பொன்.ராதாகிருஷ்ணன் சொல்றாரு...

First Published May 3, 2018, 9:03 AM IST
Highlights
BJP is not worry about anything - this is the reason pon.Radakrishnan says


கன்னியாகுமரி

"பா.ஜனதா கட்சி யாரையும் சார்ந்து நிற்கவில்லை. மக்களை சார்ந்து நிற்பதால் நாங்கள் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை"  என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

கன்னியாகுமரி மாவட்டம், பெருஞ்செல்வவிளையில் வேளாண்மைத்துறை சார்பில் மத்திய அரசின் கிராம சுயாட்சி இயக்கத்தின்கீழ் விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டது. 

இதனையொட்டி விவசாயிகள் நல்வாழ்வு கருத்தரங்கு நடந்தது. இதற்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி, விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

இந்த விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் தெய்வநாயகம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அசோக் மேக்ரின், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) குணபாலன், வேளாண்மை துணை இயக்குனர் பாலசந்தர் உள்பட பலர் பேசினர்.  ராஜாக்கமங்கலம் வேளாண்மை உதவி இயக்குனர் பரிமளம் வரவேற்று பேசினார். 

இதன்பின்னர் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியது:

"வருகிற பாராளுமன்ற தேர்தலில் 3-வது அணி அமைந்தால் அது பா.ஜனதாவின் ‘பி‘ அணியாக இருக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்திருக்கிறார். இதில் அவர்களுடைய அனுபவம் பேசுகிறது. 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நால்வர் அணியை அமைத்து, அ.தி.மு.க.வின் ‘பி‘ அணியாக செயல்பட்ட அனுபவத்தில் அவர் சொல்கிறார்.

பா.ஜனதா கட்சி யாரையும் சார்ந்து நிற்கவில்லை. முழுக்க, முழுக்க மக்களை சார்ந்து நின்று கொண்டிருக்கிறோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகள் எங்களோடு வலுவோடு இருந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் நாங்கள் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை.

தொல்.திருமாவளவன் தேசிய அளவில் காங்கிரசோடு கூட்டணியில் இருப்போம் என்று சொல்லி இருக்கிறார். அப்படி என்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சியை தேசிய அளவில் வடிவமைத்துள்ளாரோ என்னவோ தெரியவில்லை. 

ஒருவேளை தி.மு.க. இல்லாமல் காங்கிரஸ் தனியாக ஒரு கூட்டணி அமைத்தது என்று சொன்னால், அப்போது இவர் என்ன செய்யப்போகிறார்? எனவே இது தி.மு.க.வுக்கு விடப்பட்ட எச்சரிக்கையா? அல்லது காங்கிரசுக்கு விடப்பட்டிருக்கிற எச்சரிக்கையா? என்று எனக்கு தெரியவில்லை.

கர்நாடக தேர்தல் பிரசாரத்தின்போது காவிரி பிரச்சனை குறித்து பிரதமர் மோடி பேசாதது குறித்து கேட்கிறீர்கள். ஆனால், அதே கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி பேசியது குறித்து யாரும் சொல்லவில்லையே?

அவர் காவிரி பிரச்சனை குறித்து பேசும்போது, “காங்கிரசுக்கு ஓட்டு போட்டால்தான் ஒரு சொட்டு தண்ணீர்கூட தமிழகத்துக்கு கொடுக்க மாட்டோம். பா.ஜனதாவுக்கு ஓட்டு போட்டால் தமிழகத்துக்கு தண்ணீர் கொடுத்து விடுவார்கள்“ என்று பேசியிருக்கிறார்.

தமிழகத்தில் துணை ராணுவம் குவிக்கப்பட்டது பற்றி கேட்கிறீர்கள். தமிழகத்தில் முதலமைச்சர் இருக்கிறார். அமைச்சரவை இருக்கிறது. அவர்களுக்கு கீழ் அரசாங்கம் நடக்கிறது. அவர்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லா விஷயத்தையும் கவனித்து வருகிறார்கள். எனவே, துணை இராணுவம் பற்றி அரசாங்கம் சொல்லட்டும்.

சாராயக் கடைகளை அடைக்கக்கோரி பிளஸ்-2 மாணவர் தற்கொலை செய்திருப்பதாக அறிகிறேன். நான் என்ன நினைக்கிறேன் என்றால் இதன் பின்னணி என்ன? எது இந்த மாணவரை தற்கொலை செய்ய தூண்டியது? சாராயத்தால் அந்த மாணவனின் குடும்பம் அல்லது அந்த ஊர் பாதிக்கப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிய வேண்டும். சாராயம் ஒழிக்கப்பட வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்ட ஆறு எம்.எல்.ஏ.க்களும் என்னை ரகசியமாக சந்திக்கவில்லை. ரகசியமாக சந்திக்க என்ன இருக்கிறது? நாங்கள் என்ன சந்திக்கக் கூடாத ஆட்களா? சந்திக்காத நபர்களா? சந்தித்துக்கொள்ள விதிமுறை எதுவும் வகுத்து வைத்துள்ளர்களா? நாங்கள் வெளிப்படையாக சந்தித்தோம். பல விஷயங்கள் தொடர்பாக பேசினோம். மக்கள் பிரதிநிதிகள் என்ற முறையில் நல்ல நாகரிகமான அரசியல் வளர வேண்டும் என்பதற்காக சந்தித்து பேசினோம். 

நான் பாராளுமன்ற உறுப்பினராகி 4 வருடம் ஆகிறது. இந்த 4 ஆண்டில் எத்தனை கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் கொண்டு வந்துள்ளோம்? என்பதை அவர்களிடம் கொடுத்துள்ளேன். அதை அவர்கள் புரிந்துகொள்வார்கள். 

தமிழக முதலமைச்சரையும் சந்தித்து பேசி இருக்கிறேன். எனவே, தேவையான திட்டங்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தருவார்கள். துறைமுகம் சம்பந்தமாகவும் அவர்களிடம் பேசியிருக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரையில் துறைமுகம் இல்லை என்று சொன்னால் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கக் கூடிய மீனவர்கள் உள்பட இலட்சக்கணக்கான மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் என்று நான் நினைக்கிறேன். கன்னியாகுமரி துறைமுக திட்டத்துக்கு தேவையான ஒத்துழைப்பை தமிழக அரசு கொடுத்து வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.
 

click me!