
தமிழக காங்கிரஸை தி.மு.க. அல்லாடலில் விட்டிருப்பது அதன் செயல்பாடுகளிலும், பேச்சுக்களிலும், தெள்ள தெளிவாக விளங்குவதாக புலம்பிக் கொட்டுகின்றனர் கதர் கோஷ்டிகள்.
ஸ்பெக்டரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலையானதும், ‘எதிர்கட்சிகளின் தீய பரப்புரை இந்த தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்தது’ என்று மென்மையாக புன்னகைத்தார் மன்மோகன் சிங். அருண்ஜெட்லியே டென்ஷனாகுமளவுக்கு இந்த தீர்ப்பை தி.மு.க.வுக்காக கொண்டாடி மகிழ்ந்தது தேசிய காங்கிரஸ்.
இந்நிலையில் 2ஜி வழக்கின் முக்கிய நாயகனான ஆ.ராசா தற்போது வழங்கி வரும் பேட்டிகளில் மாஜி பிரதமர் மன்மோகன் சிங்கை தாக்கித் தாக்கியே பேசி வருகிறார். ’மன்மோகன் சிங்கிற்கு 2ஜி பற்றி எதுவுமே தெரியவில்லை. இந்த வழக்கு பிரச்னை எழுந்ததுமே, என்னை கைது செய்துவிட்டால் இந்த பிரச்னையில் தீர்வு கிடைத்துவிடும் என நினைத்தார்.’ என்று வெளிப்படையாக போட்டுத் தாக்கினார்.
காங்கிரஸ்காரர்களை ராசாவின் இந்த வார்த்தைகள் கடும் அதிர்ச்சிக்கும், அதிருப்திக்கும் ஆளாக்கியுள்ளன. அவர்கள் இது பற்றி பேசுகையில் ‘ஸ்பெக்ட்ரம் விடுதலையை ஏதோ எங்களுக்கான தீர்ப்பு போல் நினைத்து கொண்டாடினோம். ஆனால் ராசாவின் வழியாக எங்களை சீண்ட துவங்கியுள்ளது தி.மு.க. அதிலும் எல்லா மட்டங்களிலும் நற்பெயர் பெற்ற மன்மோகனையே குறிவைத்து அடிக்கிறார்கள்.
தி.மு.க.வின் இந்த தாக்குதலின் பின்னனி என்ன? ஒரு வேளை எங்களை கழட்டிவிட்டு விட்டு பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர விரும்புகிறார்களா?
மோடியின் கோபாலபுர விசிட்டின் மறைமுக ஒப்பந்தம் இந்த கூட்டணி முடிவு தானோ? ஏதோ ஒரு முக்கிய காரணம் இல்லையென்றால் தி.மு.க. இப்படி எங்களின் முக்கிய தலைமைகளை மோசமாக விமர்சனம் செய்ய வேண்டிய அவசியமென்ன?
தி.மு.க.வை விட்டால் எங்களுக்கும் கூட்டணி சேர வேற வழியில்லை என்பது தெரிந்தே இப்படி சீண்டுகிறார்களோ?” என்று புலம்பிக் கொட்டுகிறார்கள்.
என்னதான் நினைக்கிறீங்கன்னு அந்த புதிரை கொஞ்சம் உடைச்சு சொல்லுங்களேன் தி.மு.க. புள்ளிகளே!...