“கூட்டணியில் பாஜக இல்லாததால் அதிமுக மாபெரும் வெற்றி பெறும்..!” தமிழ்மகன் உசேன்.!

By vinoth kumarFirst Published Feb 11, 2022, 12:07 PM IST
Highlights

இஸ்லாமியர்களின் கலாச்சாரப்படி பெண்கள் ஹிஜாப் அணிவது எங்கள் நிலைப்பாடு. அதில் யாரும் குறுக்கிட முடியாது. ஹிஜாப் அணிவது தேவைக்கோ, இஷ்டத்துக்கோ போடுவது கிடையாது. அது இஸ்லாமியர்களின் கலாச்சாரம். ஆக இஸ்லாமியர்களின் கலாச்சாரத்தில் யாரும் தலையிடக்கூடாது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தங்கள் கூட்டணியில் இல்லாததால் அதிமுக அதிகளவு வெற்றியை பெறும் என அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியில் பங்கீடு பேச்சுவார்த்தையில் தொடர் இழுபறி நீடித்து வந்த நிலையில், தொகுதி பங்கீட்டில் எந்த உடன்பாடு ஏற்படாததால், வரும் உள்ளாட்சி தேர்தலில் பாஜக அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிடும் என்று மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். இதை அதிமுகவினர் மறைமுகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், நாகை மாவட்டம் நாகூர் தர்காவில் தொழுகை நடத்திய பிறகு அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- அதிமுக கொள்கை வேறு, பாஜகவின் கொள்கை வேறு. அந்த கொள்கையின் அடிப்படையில் இந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பை இழந்திருந்தாலும் அது நன்மையை பயக்கும். பாஜக எங்களோடு கூட்டணியில் இல்லாததால் உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம். கடந்த சட்டமன்ற தேர்தலை காட்டிலும் உள்ளாட்சி தேர்தலில் சிறுபான்மையினர் வாக்கை அதிமுக அதிகளவில் அறுவடை செய்து மாபெரும் வெற்றி பெறும்.

இஸ்லாமியர்களின் கலாச்சாரப்படி பெண்கள் ஹிஜாப் அணிவது எங்கள் நிலைப்பாடு. அதில் யாரும் குறுக்கிட முடியாது. ஹிஜாப் அணிவது தேவைக்கோ, இஷ்டத்துக்கோ போடுவது கிடையாது. அது இஸ்லாமியர்களின் கலாச்சாரம். ஆக இஸ்லாமியர்களின் கலாச்சாரத்தில் யாரும் தலையிடக்கூடாது. அப்படி தலையிட்டால் அது மதக்கலவரத்தை தூண்டுவதற்கு முதல்புள்ளி தான்" என்று தெரிவித்தார். 

ஒரு வாரமாக கட்சியினர் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பாஜகவை மறைமுகமாக தாக்கி பேசியிருச்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!