இடைத் தேர்தல்களில் செமையா அடி வாங்கும் பாஜக…. உத்தரபிரதேசத்தில் பின்னடைவு….

First Published May 31, 2018, 10:31 AM IST
Highlights
BJP hit by people in by elections all over india


4 மக்களவைத் தொகுதி மற்றும் 11 சட்டமன்றத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பெரும்பாலான தொகுதிகளில் பாஜக  பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. உத்தர பிரதேச மாநிலம் கைரானா தொகுதியில் பாஜக பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கைரானா, மகாராஷ்ட்ரா  மாநிலம் பல்கார், பண்டாரா-கோண்டியா, நாகாலாந்து மாநிலம் நாகாலாந்து ஆகிய 4 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. பாஜக  எம்.பி. ஹுக்கும் சிங் உயிரிழந்ததால் கைரானா தொகுதியிலும், நாகாலாந்து மாநில முதலமைச்சராக  பொறுப்பேற்ற நிபியு ரியோ ராஜினாமா செய்ததால் நாகாலாந்து தொகுதியிலும் இடைத்தேர்தல் நடந்தது.  

இதுபோல், உத்தரபிரதேச மாநிலம் நூர்புர், மகாராஷ்ட்ரா மாநிலம் பாலஸ் கடேகோன், பஞ்சாப் மாநிலம் ஷாகோட், பீகார் மாநிலம் ஜோகிகட், ஜார்கண்ட் மாநிலம் கோமியா, சில்லி, கேரள மாநிலம் செங்கானூர், மேகாலயா மாநிலம் அம்பாதி, உத்தரகாண்ட் மாநிலம் தாராளி, மேற்கு வங்காள மாநிலம் மகேஷ்தலா ஆகிய 10 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. அதேபோல், வாக்காளர் அட்டை விவகாரத்தால் தேர்தல் தள்ளிவைத்த  கர்நாடக மாநிலம் ஆர்.ஆர். நகர் சட்டபேரவை தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. 

இதில் உத்தர பிரதேச மாநிலம் கைரானா மக்களவை தொகுதி முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கைரானா தொகுதியில், பாரதீய ஜனதாவுக்கு எதிராக ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டாக வேட்பாளரை நிறுத்தியுள்ளன. இந்நிலையில் இந்த தொகுதியில் பாஜக பின்னடைவைச் சந்தித்துள்ளது.

கர்நாடக மாநிலம் ராஜேஷ்வரி நகர் தொகுதியில் காங்கிரஸ்  கட்சியும், மேற்குவங்க மாநிலம் மகேஷ்தலா சட்டப்பேரவை தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ்  கட்சியும்,. உத்தர பிரதேசம் நுர்புர் சட்டப்பேரவை தொகுதியில் சமாஜ்வாடி  கட்சியும் முன்னிலை பெற்றுள்ளது.

பாஜக வேட்பாளர்கள் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருவதால் அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்னும் ஒரு சில மணி நேரங்களில் முழுமையான ரிசல்ட் தெரிந்துவிடும்.

click me!