டெல்லியில் 45 பேர் உயிரிழந்ததற்கு மத்திய பாஜக அரசுதான் பொறுப்பு.. மோடியை மோசமாக விமர்சிக்கும் கே.எஸ்.அழகிரி.!

By vinoth kumarFirst Published Apr 24, 2021, 3:33 PM IST
Highlights

அனைத்து மக்களுக்கும் இலவசமாக மாநில அரசுகளின் மூலம் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது. இது காலம் தாழ்ந்த அறிவிப்பு என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

அனைத்து மக்களுக்கும் இலவசமாக மாநில அரசுகளின் மூலம் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது. இது காலம் தாழ்ந்த அறிவிப்பு என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில்;- கொரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தடுப்பூசி போடுகிற முதன்மைப் பொறுப்பு மத்திய அரசுக்குத்தான் இருக்கிறது என்பதைத் தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் பலமுறை வலியுறுத்தி வந்தன. இந்த அழுத்தத்தின் காரணமாக அனைத்து மக்களுக்கும் இலவசமாக மாநில அரசுகளின் மூலம் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது. இது காலம் தாழ்ந்த அறிவிப்பாகவே கருத வேண்டியிருக்கிறது.

Latest Videos

அதேபோல, தலைநகர் டெல்லியில் கங்காராம் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக, 25 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மருத்துவமனையில் 510 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். பலமுறை மத்திய சுகாதாரத்துறையை வலியுறுத்தியும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்குவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இந்த நிலையில்தான் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள். அதேபோல, நேற்று இரவு தலைநகர் டெல்லியில் உள்ள ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு, 20 பேர் பலியாகி இருக்கிற அதிர்ச்சி தகவலும் வெளிவந்துள்ளது.

தலைநகர் டெல்லியில் மத்திய பாஜக ஆட்சியாளர்களின் நேரடிப் பார்வையில் இருக்கும்போதே இத்தகைய கொடூரமான சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பிரதமர் மோடியிடம் காணொலிக் கூட்டத்தில் ஆக்சிஜன் கேட்டுக் கெஞ்சிப் பேசியதைப் பார்க்கும் போது மிகுந்த வேதனையாக இருக்கிறது. அந்தக் கோரிக்கையைப் பரிவுடன் பரிசீலிக்காமல் காணொலிக் கூட்டத்தை ஒளிபரப்பியது குறித்து, அவர் மீது கடும் கண்டனத்தைப் பிரதமர் மோடி வெளிப்படுத்துவதில்தான் கவனம் செலுத்தினார். ஆனால், ஆக்சிஜன் பற்றாக்குறைக்குப் பரிகாரம் காண எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் கடந்த 24 மணி நேரத்தில் தலைநகர் டெல்லியில் 45 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதற்கு மத்திய பாஜக அரசுதான் பொறுப்பாகும்.

கொரோனா தொற்று ஏற்பட்டு 15 மாத காலத்தில் பாஜக அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் நடைமுறை சாத்தியம் இல்லாத வகையிலேயே எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனாவை எதிர்கொள்ளச் சுகாதார கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்த சுகாதாரத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படவில்லை. இந்திய மக்கள் அனைவரும் அச்சத்திலும், பீதியிலும் இருந்து விடுபட உரிய மருத்துவ சிகிச்சைகளை வழங்க மத்திய பாஜக அரசு தோல்வியடைந்து விட்டது.

தடுப்பூசி தட்டுப்பாடு, ஒரே தடுப்பூசிக்கு மூன்று விலை, விற்பனையைத் தனியார் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களிடமே ஒப்படைத்தது, தடுப்பூசியை வாங்குவதற்குச் சந்தையில் ஆரோக்கியமற்ற போட்டி, ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கும்போது ஏற்றுமதி இவை எல்லாமே பாஜக அரசு எடுத்த தவறான நடவடிக்கைகளின் விளைவாகும். எனவே, கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கியிருக்கும் மக்களைப் பாதுகாப்பதை தலையாய நோக்கமாகக் கொண்டு, பொறுப்புணர்வோடு இப்பிரச்சினையைக் கையாள மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன் என கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

click me!