மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்? BJP - TMC இடையே இழுபறி..! தேர்தலுக்கு பிந்தைய சர்வே முடிவுகள்

By karthikeyan VFirst Published Apr 29, 2021, 7:51 PM IST
Highlights

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸுக்கு பாஜக இந்த தேர்தலில் செம டஃப் கொடுத்திருப்பது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
 

தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குகள் வரும் மே 2ம் தேதி எண்ணப்படுகின்றன. 

மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக நடந்த சட்டமன்ற தேர்தலில், இன்றுதான் கடைசிக்கட்ட வாக்குப்பதிவு நிறைவுபெற்றது. எனவே தேர்தல் நடைபெற்ற 5  மாநிலங்களில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று நடத்தப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுவருகின்றன.

அதன்படி, 294 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு பாஜக கடும் போட்டியளித்துள்ளது. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் வெறும் 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த பாஜக, இந்த தேர்தலில் சுமார் 140 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பிருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ரிபப்ளிக் - சி.என்.எக்ஸ் நிறுவனம் இணைந்து நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள், பாஜக கூட்டணி 138-148 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கிறது. திரிணாமூல் காங்கிரஸ் கூட்டணி 128-138 தொகுதிகளிலும், இடதுசாரி கூட்டணி 11-21 தொகுதிகள் மட்டுமே வெற்றி பெறும் எனவும் ரிபப்ளிக் எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

ரிபப்ளிக் - சி.என்.எக்ஸ் சர்வேயின்படி, மேற்கு வங்கத்தில் ஆட்சியமைப்பதில் யாருக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காமல், இழுபறி நீடிக்க வாய்ப்பிருப்பதை காட்டுகிறது.

ஆனால், டைம்ஸ் நவ் - சி வோட்டர் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில், திரிணாமூல் காங்கிரஸ் கூட்டணி 158 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  பாஜக கூட்டணி 115 தொகுதிகளிலும் இடது சாரி கூட்டணி 19 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கிறது.

கடந்த 2016 தேர்தலில் 211 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த திரிணாமூல் காங்கிரஸ் இம்முறை 60 தொகுதிகளையாவது இழக்கும் என்பதையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதேவேளையில் மேற்குவங்கத்தில் பாஜக வலுவாக காலூன்றியிருப்பதையும் இந்த சர்வேக்கள் வெளிப்படுத்தியுள்ளன.
 

click me!