கே.என்.லட்சுமணன் மரணம்: பெரியார் பேரணிக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்... திமுக கூட்டணியில் எம்.எல்.ஏ. ஆனவர்

By Asianet TamilFirst Published Jun 2, 2020, 9:27 AM IST
Highlights

2001-ம் மயிலாப்பூர் தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கே.என்.லட்சுமணன். 2001-ம் ஆண்டில் பாஜக, திமுக கூட்டணியில் இருந்தபோது கிடைத்த வெற்றி இது. இதே தேர்தலில்தான் ஹெச்.ராஜா (காரைக்குடி), முரளிதரன் (தளி), ஜெகவீரபாண்டியன் (மயிலாடுதுறை) ஆகியோரும் வெற்றி பெற்றனர். 2001-ல் 4 இடங்களில்வெற்றி பெற்ற பாஜகவின் எம்.எல்.ஏ.க்கள் குழு தலைவராக சட்டப்பேரவையில் கே.என்.லட்சுமணன் செயலாற்றினார்.
 

தமிழக சட்டப்பேரவையில் பாஜக குழு தலைவராக செயல்பட்டவர் என்ற பெருமை மறைந்த கே.என். லட்சுமணனுக்கு உண்டு.

 
முதுமை மற்றும் உடல் நலக்குறைவுக்காக சிகிச்சைப் பெற்று வந்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என். லட்சுமணன் நேற்று இரவு காலமானார். சேலத்தைச் சேர்ந்த கே.என்.லட்சுமணன் தமிழக பாஜகவுக்கு இரண்டு முறை தலைவராக இருந்தவர். இன்று எதிரும் புதிருமாக விமர்சித்துக்கொள்ளும் திமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணியில் இருந்தபோது கே.என். லட்சுமணனும் ஒரு முறை மாநில தலைவராக இருந்தவர்.
இதேபோல 2001-ம் மயிலாப்பூர் தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கே.என்.லட்சுமணன். 2001-ம் ஆண்டில் பாஜக, திமுக கூட்டணியில் இருந்தபோது கிடைத்த வெற்றி இது. இதே தேர்தலில்தான் ஹெச்.ராஜா (காரைக்குடி), முரளிதரன் (தளி), ஜெகவீரபாண்டியன் (மயிலாடுதுறை) ஆகியோரும் வெற்றி பெற்றனர். 2001-ல் 4 இடங்களில்வெற்றி பெற்ற பாஜகவின் எம்.எல்.ஏ.க்கள் குழு தலைவராக சட்டப்பேரவையில் கே.என்.லட்சுமணன் செயலாற்றினார்.
1972-ம் ஆண்டில் சேலத்தில் திராவிடர் கழகம் சார்பில் பெரியார் மூட நம்பிக்கை எதிர்ப்பு பேரணி நடத்தியபோது, அதற்கு எதிராக ஜனசங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்துக்கு தலைமை தாங்கியவர் கே.என்.லட்சுமணன். இந்தப் பேரணி பற்றிதான் கடந்த ஜனவரியில் நடிகர் ரஜினி பேசி சர்ச்சையானது நினைவிருக்கலாம்.

கே.என். லட்சமணன் மறைவுக்கு திமுக  தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் மறைவெய்திய செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். கொள்கை ரீதியாக மாற்று முகாமில் இருந்தாலும் கருணாநிதி மீது மிகுந்த அன்பு கொண்டவர். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திமுக இடம் பெற்றிருந்தபோது மயிலாப்பூர் தொகுதியில் லட்சுமணன் வெற்றி பெற்ற நிகழ்வு நிழலாடுகிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், கட்சிப் பிரமுகர்கள் உள்ளிட்டோருக்கு தி.மு.கழகத்தின் சார்பில் ஆறுதலைத் தெரிவிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

click me!