
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்வதைப் பற்றியே பாஜக தமிழக தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கடந்த ஓராண்டாக காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, தினகரன் ஆகிய மூன்று தரப்பும் ஒவ்வொரு வகையில் தங்களின் வலிமையை நிரூபிக்க போராடுகின்றன. இதுவரை இல்லாத அளவிற்கு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடக்க இருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகார் காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதனால் இந்தமுறை பணப்பட்டுவாடாவைத் தடுக்க தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
எனினும் பல்வேறு கட்டுப்பாடுகளையும் மீறி பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. பணப்பட்டுவாடாவைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட தமிழிசை சௌந்தரராஜன், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
பணப்பட்டுவாடா செய்த புகாரில் இதுவரை 8 பேரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். நேற்றுகூட ஆர்.கே.நகரில் பணப்பையுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக திமுக மற்றும் தினகரன் ஆதரவாளர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பணப்பட்டுவாடா தொடர்ந்து நடைபெற்றால், தேர்தலை நியாயமாக நடத்த முடியாது என தேர்தல் ஆணையம் கருதினால், மீண்டும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, பாஜகவின் முன்னாள் ஆர்.கே.நகர் வேட்பாளர் கங்கை அமரன் உள்ளிட்டோரும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்வதைப் பற்றியே பாஜக தலைவர்கள் தொடர்ந்து பேசிவருகின்றனர்.
ஆனால், பணப்பட்டுவாடா செய்யப்படுவது கண்டறியப்பட்டால், அந்த வேட்பாளரை தகுதிநீக்கம் செய்வதைவிட்டு தேர்தலையே ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துவது தவறானது என திமுக சார்பில் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பிலும் தெரிவிக்கப்படுகிறது. திமுக செயல் தலைவர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோரும் பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளரை தகுதிநீக்கம் செய்யவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.