
ஆளுநரின் செயல்பாட்டை விமர்சிப்பது சட்டவிரோத செயல் என்றும் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டே ஆளுநரின் செயல்பாடுகள் அமைந்துள்ளதாகவும் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், கோவை, நெல்லை, குமரி, கடலூர் என மாவட்டந்தோறும் ஆய்வு பணிகளை மேற்கொண்டுவருகிறார். ஆளுநரின் ஆய்வு, மாநில சுயாட்சிக்கு எதிரானது எனவும் ஆளுநர் வரம்பை மீறி செயல்படுவதாகவும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
கடலூரில் ஆய்வு மேற்கொண்ட ஆளுநருக்கு எதிராக திமுக மற்றும் விசிகவினர் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஆளுநர் மாளிகையிலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், இந்திய அரசியல் சாசனத்தின்படி ஒரு மாநிலத்தின் நிர்வாக தலைவர் ஆளுநர் தான். மாநில நிர்வாகத்தின் அனைத்து தரப்பு தகவலையும் பெறுவதற்கு அவருக்கு முழு அதிகாரம் உள்ளது. அதுபோல மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் செல்வதற்கு அவருக்கு தடை கிடையாது. ஆனால், அப்படி செயல்படுவது பற்றி ஒருதலைப்பட்சமாக தகவல்கள், விவாதங்கள், கருத்துகள் கூறப்படுகின்றன.
ஆளுநரின் செயல்பாடுகள் தொடர்பான சில கருத்துகள் மிகவும் தரம் தாழ்ந்தவைகளாக உள்ளன. நியாயத்துக்கு புறம்பான கருத்துகளை வெளிப்படுத்துகின்றனர். அரசியல் சாசனம் பற்றி தெரியாமல் ஆளுநரின் செயல்பாடுகள் பற்றி பேசி பதிவு செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அது சட்ட விரோதமானது. அரசியல் சாசன அதிகாரம் கொண்ட ஆளுநரின் அலுவலகத்தை மரியாதை குறைவாக பேசுவது சட்டப்படி தவறாகும் என ஆளுநர் மாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.