
குக்கர் சின்னத்தில் போட்டியிடும் தினகரனுக்கு ஆதரவாக சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் சிறுவர்கள் ஓட்டு கேட்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
சென்னை, ஆர்.கே.நகருக்கு வரும் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி, டிடிவி தினகரன் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. தற்போது ஆர்.கே.நகரில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் நடப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சூறாவளி பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அதிமுக வேட்பாளரான மதுசூதனனுக்கு வாக்கு சேகரிப்பில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், தொண்டர்கள் என வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், திமுக வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து திமுக தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக, அதிமுக ஆகிய கட்சிகள், தங்கள் வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்வதோடல்லாமல், பிரச்சார பாடல்களையும், தயார் செய்து ஒளிபரப்பி வருகின்றனர். ஆர்.கே.நகரில் ஆட்டம் பாட்டம் என தேர்தல் பிரச்சாரம் நடந்து வருகிறது.
ஆர்.கே.நகரில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெறும் வேளையில், போடுங்கம்மா ஓட்டு, குக்கர் சின்னத்தப் பாத்து என்று சிறுவர்களின் பிரச்சாரம் செய்யும் வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது.