விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் பாஜக... பகிரங்கமாக எச்சரிக்கும் வேல்முருகன்..!

By vinoth kumarFirst Published Dec 22, 2020, 5:13 PM IST
Highlights

விவசாயிகளின் போராட்டத்தை இழிவுப்படுத்தும் வகையில் மத்திய அரசும், பாஜகவும் கருத்துக் கூறுவது கடும் கண்டனத்திற்குரியது என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் போராட்டத்தை இழிவுப்படுத்தும் வகையில் மத்திய அரசும், பாஜகவும் கருத்துக் கூறுவது கடும் கண்டனத்திற்குரியது என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆதாயம் பெறும் வகையிலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே அழிக்கும் வகையிலும் மோடி அரசு கொண்டுவந்துள்ள விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, டெல்லியில் விவசாயிகள் 26-வது நாளாக போராடி வருகின்றனர். 

இந்நிலையில்,  மோடி, அமித்ஷா, தோமர், ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினர், விவசாயிகளின் போராட்டத்தை இழிவுப்படுத்தி வருவது கண்டனத்துக்குரியது. கடந்த 18ம் தேதி பேசிய மத்திய பிரதேச விவசாயிகளின் காணொலிக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, டெல்லியில் போராடும் விவசாயிகளை அரசியல் ஆதாயங்களுக்காக எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துவதாக கூறியிருக்கின்றார். இது விவசாயிகள் மட்டுமின்றி, ஒட்டு மொத்த நாட்டு மக்களையும் இழிவுப்படுத்தும் செயல். போராட்டம் நடத்தும் விவசாயிகளின் பின்னணியில், காலிஸ்தான் பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் இருப்பதாக, மத்திய அமைச்சர்கள் தோமர், ரோசாஹேப் தான்வே, அரியானா வேளாண் அமைச்சர் ஜேபி டலால் ஆகியோர் தங்களது பங்குக்கு, நஞ்சை உமிழ்ந்துள்ளனர். 

இது போதாதென்று, வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடுபவர்களில் ஒருவர் கூட விவசாயி கிடையாது என்று பாஜக-வை சேர்ந்த வானதி சீனிவாசன், ஹெச்.ராஜா ஆகியோர் விஷம பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்களத்தில் விவசாயிகள் 33 பேர் உயிரிழந்த நிலையில், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர் விவசாயிகள். அவர்களை பாதுகாக்கும் நோக்கில், பஞ்சாப், அரியானா மருத்துவர்கள், செவிலியர்கள் டெல்லியில் குவிந்து வண்ணம் உள்ளனர். இப்படியான சூழலில், விவசாயிகளின் போராட்டத்தை பாஜகவினர் கொச்சைப்படுத்தி வருவது ஏற்கக்கூடியது அல்ல. இது பாஜகவினரின் அறிவற்ற நிலையே காட்டுகிறது. 

எனவே, எதிர்க்கட்சியினர் தான் விவசாயிகளின் போராட்டத்தை தூண்டியது என்ற, மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜகவினர் கருத்து முற்றிலும் தவறானது. மேலும், விவசாயிகளின் போராட்டத்தின் பின்னணியில் அரசியல் கட்சி இருப்பதாக மோடி அரசு விஷம பிரச்சாரங்களில் ஈடுப்படுவதை விடுத்து, புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். விவசாயிகளின் போராட்டம் என்பது நாட்டின் ஜனநாயகத்திற்கும்,  அதன் அரசியலமைப்புச் சட்ட அடிப்படை கட்டமைப்பையும் பாதுகாப்பதற்கான மகத்தான போராட்டமாகும். தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட விவசாயிகளின் போராட்டம் வெல்லட்டும். விவசாயிகளின் போராட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்றும் துணை நிற்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று வேல்முருகன் கூறியுள்ளார்.

click me!