தினகரனின் ஆட்டத்தை உற்று நோக்கும் பாஜக: பெரா வழக்குகளின் தீர்ப்புக்கு நாள் குறிக்க முடிவு!

First Published Jun 6, 2017, 7:26 PM IST
Highlights
BJP decides to speed up fera cases against TTV dinakaran


ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், சசிகலா குடும்பம் அரசியலில் இருக்க கூடாது என்று விரும்பிய பாஜக, சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவை சிறைக்கு அனுப்பியது.

ஆனாலும், துணை பொது செயலாளராக நியமிக்கப்பட்ட தினகரன், கட்சியையும், ஆட்சியையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வர மேற்கொண்ட நடவடிக்கைகளையும் கண்ட பாஜக, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை, ஆர்.கே.நகர் தேர்தல் நிறுத்தம் என பதிலடி கொடுத்தது.

அதிலும் அடங்காததால், இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், திகார் சிறையில் அடைத்தது. தற்போது, ஜாமினில் வெளிவந்த தினகரன், முன்னைவிட இன்னும் தீவிரமாக செயல்பட ஆரம்பித்துள்ளார்.

பெங்களூரில் நேற்று சசிகலாவை சந்தித்த தினகரன், சில நாட்களுக்கு அடக்கி வாசிப்பார் என்று எதிர்பார்த்தால், அதற்குள் 25 எம்.எல்.ஏ க்களை தம் பக்கம் இழுத்து எடப்பாடிக்கு இடர்பாடு கொடுக்க ஆரம்பித்து விட்டார்.

மேலும், தங்க தமிழ்ச்செல்வன், செந்தில் பாலாஜி, பழனியப்பன், தோப்பு வெங்கடாச்சலம் உள்ளிட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ க்கள் பலர் அமைச்சர் கனவில் மிதந்து வருகின்றனர்.

சசிகலாவின், ஒப்புதல் இல்லாமல், தினகரன் இந்த அளவுக்கு ஆட்டம் போட வாய்ப்பில்லை என்று, எடப்பாடி மற்றும், பன்னீர் தரப்பு உறுதியாக நம்புகிறது.

அத்துடன், டெல்லி மேலிடத்திற்கு, தினகரானால், ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்தும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அதனால், கடந்த இரண்டு நாட்களாக தினகரனின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வந்த டெல்லி மேலிடம், அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்துள்ளது.

தற்போதுள்ள நிலையில், அந்நிய செலாவணி மோசடி வழக்கிலான தீர்ப்பை விரைவு படுத்துவதன் மூலம், தினகரனை சில ஆண்டுகள் சிறையில் தள்ள முடியும்.

அதற்கு முன்னதாக, இரட்டை இலை சின்னத்திற்காக, புரோக்கருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட பணத்தில், 1 கோடியே 80 லட்சம் ஹவாலா பணம் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளதால், அதன் அடிப்படையில் மற்றொரு வழக்கும் தினகரன் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதனால், முதலில், ஹவாலா பண மோசடி வழக்கில், மீண்டும் தினகரனை கைது செய்து சிறையில் அடைத்து விடுவது என்றும், அந்த வழக்கில் ஜாமீன் பெறுவதற்கு முன், அந்நிய செலாவணி மோசடி வழக்கின் தீர்ப்பை விரைவு படுத்தவும் டெல்லி மேலிடம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன் காரணமாகவே, தினகரன் என்ன செய்தாலும், அதனால், ஆட்சி கவிழ்வதற்கு வாய்ப்பில்லை. எனவே, நாம் அமைதியாக இருப்போம் என்று தமது ஆதரவாளர்களிடம் தொடர்ந்து கூறி வருகிறார் எடப்பாடி.

click me!