11 மணிக்கு ஸ்டாலின் முதல்வர்... 11.05க்கு வண்டியை விடுங்க... மிரட்டிய செந்தில் பாலாஜி மீது பாஜக புகார்..!

By Asianet TamilFirst Published Mar 18, 2021, 8:44 AM IST
Highlights

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்றவுடனே ஆற்றில் மாட்டு வண்டியை விடுங்கள் என்றும் தடுக்கும் அதிகாரிகள் இருக்கமாட்டார்கள் என்று திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி பேசியது சர்ச்சையானது.
 

கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார். தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் செந்தில் பாலாஜி, தேர்தல் பிரசாரத்தில் பேசிய பேச்சு ஒன்று சர்ச்சையாகியிருக்கிறது. இதுதொடர்பான காணொலி காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகிவருகிறது.
அந்தக் காணொலியில், “திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் காலை 11:00 மணிக்கு முதல்வராக பதவியேற்பார். 11:05 மணிக்கு மாட்டு வண்டியை நீங்களே ஆற்றுக்கு ஓட்டுங்கள். எந்த அதிகாரியும் தடுக்கமாட்டான். தடுத்தால் எனக்கு போன் செய்யுங்கள். அந்த அதிகாரி இங்கு இருக்க மாட்டான்” என்று செந்தில்பாலாஜி பேசினார். ஆற்றில் மணல் அள்ளத் தூண்டும் வகையில் செந்தில் பாலாஜி பேசியது மட்டுமின்றி, தடுக்கும் அதிகாரி இருக்கமாட்டான் என்று செந்தில் பாலாஜி பேசியதை எதிர்க்கட்சிகள் பிடித்துக்கொண்டன. இந்த காணொலியை அதிமுகவினரும் பாஜகவினரும் சமூக ஊடகங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் இதுதொடர்பாக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தேர்தல் ஆணையட்துக்கு புகார் மனு அனுப்பியுள்ளார். அதில், “அரசு அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” வலியுறுத்தியுள்ளார்.
 

click me!