Annamalai: என்னது.. வெல்லம் உருகுதா..? எலான் மஸ்க்கை கூப்பிடணும்... தமிழக அரசை கலாய்த்த அண்ணாமலை

By manimegalai aFirst Published Jan 18, 2022, 8:22 AM IST
Highlights

பொங்கல் பரிசு தொகுப்பில் தரப்பட்ட வெல்லம் உருகுவது தொடர்பாக எலான் மஸ்க் அழைத்து வந்து கமிட்டி போட்டு விசாரிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை: பொங்கல் பரிசு தொகுப்பில் தரப்பட்ட வெல்லம் உருகுவது தொடர்பாக எலான் மஸ்க் அழைத்து வந்து கமிட்டி போட்டு விசாரிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கியிருக்கிறது. இந்த பரிசு தொகுப்பால் ஏற்பட்டுள்ள சிக்கல்களினால் ஏன் அதை வழங்கினோம் என்று அளவுக்கு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

வெல்லத்தை சுத்தியால் அடித்தும் உடையாமல் இருப்பது, வெல்லத்தில் நோயாளிகளுக்கு செலுத்தப்படும் ஊசி, சிரிஞ்ச் கண்டெடுக்கப்பட்டது என இணைய உலகில் வெளியான வீடியோக்களே அதற்கு காரணம்.

தமிழக அரசின் இந்த பொங்கல் பரிசு தொகுப்பை மற்ற கட்சிகள் விமர்சிக்கிறதோ இல்லையோ, பாஜக தினசரி கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகிறது. அதில் லேட்டஸ்ட்டாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெல்லம் உருகுவது எலான் மஸ்க் அழைத்து வந்து கமிட்டி போட்டு விசாரிக்க வேண்டும் என்று விமர்சித்துள்ளார்.

கோவையில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதில் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியிருப்பதாவது:

குடியரசு தின விழா அணிவகுப்பில் வேலுநாச்சியார், வஉசி படங்கள் பொருத்திய தமிழக அரசின் ஊர்திக்கு அனுமதி இல்லை என்பது பொய். மத்திய பாதுகாப்புத்துறை தான் இதற்கு அனுமதி அளிக்கும்.

தனியார் தொலைக்காட்சியில் குழந்தைகளை வைத்து நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளை சட்ட ரீதியான அணுகுவோம். உத்தரப்பிரதேச தேர்தலில் பாஜக 300 இடங்களுக்கும் மேலான இடங்களை பெறும்.

மக்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் வெல்லம் உருகும் என்கின்றனர். விஞ்ஞானப்பூர்வமான ஊழலுக்கு ஒரு விஞ்ஞான பூர்வமான பதில் தான் கூறுவார்கள். இது தொடர்பாக டெஸ்லா தலைவர் எலன் மஸ்க் கூட்டி வந்து கமிட்டி அமைத்து விசாரிக்க வேண்டும்.

நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட அனைத்தையும் அறிவித்துவிட்டு இப்போது எஸ்கேப் ஆகிவிட்டார் உதயநிதி ஸ்டாலின். மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என்பதில் தமிழக பாஜக உறுதியாக இருக்கிறது. ஆனால், திமுக இது பற்றி வாயே திறக்கவில்லை, கருத்து தெரிவிக்கவில்லை.

கோவையில் மாநகராட்சி சாலைகளில் பார்க்கிங் கட்டணம் என்பது ஏற்புடையது இல்லை. இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். வரும் 21ம் தேதி இதனை கண்டித்து பாஜக தரப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

அதிமுக, பாஜக கூட்டணி சிறப்பாக இருக்கிறது. திமுக, காங்கிரஸ் கூட்டணி தான் குழப்பத்தில் உள்ளது. எங்கள் கூட்டணியில் எவ்வித முரண்பாடும் இல்லை என்று கூறி இருக்கிறார்.

click me!