எந்த அமைச்சருக்கு, யார் எதிரி? அ.தி.மு.க.வின் மொத்த ரகசியங்களை ஸ்கேன் செய்திருக்கும் திமுக மற்றும் பிஜேபி!

By sathish kFirst Published Sep 24, 2018, 3:39 PM IST
Highlights

அ.தி.மு.க. (மேலும்) ரெண்டுபட்டால் யாருக்கெல்லாம் கொண்டாட்டம்!? என்பதை துல்லியமாக எடுத்துக் காட்டியிருக்கிறது வேலுமணி - முணுசாமி தடால் புடால் ஃபைட். 

கடந்த 19-ம் தேதி சென்னையில் உள்ள தலைமை கழகத்தில் அ.தி.மு.க.வின் மாவட்ட செயலாளர்களின் கூட்டம் நடந்தது. அப்போது முதல்வர் காதில் உள்ளாட்சி துறை அமைச்சர் ஏதோ ரகசியம் கூற, சட்டென சூடான மாஜி அமைச்சர் முணுசாமி ‘சபையில இப்படி திடீர்னு எழுந்து வந்து ரகசியம் பேசுறது என்ன நாகரிகம்?’ என்று கேட்க, ‘அவர் இந்த மாநில முதல்வர், நான் அமைச்சர். அவர்ட்ட சொல்ல ரகசியங்கள் இருக்குது.’ என்று தடாலடியாக வேலுமணி பதில் சொல்ல, அதற்கும் சளைக்காத முணுசாமி ‘அரசு ரகசியத்தையெல்லாம் தலைமை செயலகத்துல பேசுங்க. இது தலைமை கழகம்.’ என்று வகுப்பெடுக்க, அதற்கு இவர் பதில் தர என்று பெரும் ரசாபாசமானது. இரண்டு பேரையும் முக்கியஸ்தர்கள் தலையிட்டு சமரசம் செய்து வைத்தனர். 

இந்த சண்டை அ.தி.மு.க.வை தாண்டியும் பல அரசியல்  மையங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம், சண்டை போட்டுக் கொண்டவர்களில் வேலுமணி, எடப்பாடியார் டீம். இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை’ என்று மைத்ரேயன் அன்றே சொன்னதில் இன்று வரை எந்த மாற்றமும் உருவாகவில்லை, இரண்டு அணிகளும் உள்ளுக்குள்ளே முட்டி மோதிக் கொண்டுதான் இருக்கின்றன! என்பதை  வேலு - முணு மோதல் வெட்டவெளிச்சமாக்கி விட்டது என்றே அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டி கூறுகின்றனர். 

அ.தி.மு.க.வினுள் தொட்டுத் தொடரும் இந்த மோதல் தி.மு.க.வை குஷியாக்கியுள்ளது. இதில் கூட ஆச்சரியமில்லை. பி.ஜே.பி.யையும் இது புன்முறுவல் பூக்க வைத்துள்ளதுதான் ஆச்சரியமே. 

கடந்த சில வாரங்களாகவே தம்பிதுரை, ஜெயக்குமார் என்று  அ.தி.மு.க.வின் மிக முக்கிய புள்ளிகள் சிலர் பி.ஜே.பி.க்கு எதிராக உருமிக் கொண்டுள்ளனர். இது தமிழக அரசு மீது டெல்லிக்கு இருந்த அதிகாரம், அழுத்தத்தின் வீரியத்தை பொதுவெளியில் கேள்விக்கு உள்ளாக்கியது. இதனால் நொந்து கிடந்த பி.ஜே.பி. எப்போது வேண்டுமானாலும் அ.தி.மு.க. வி.ஐ.பி.க்களின் வளாகங்களில் ரெய்டை நடத்திடக் கூடும்! என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில் அ.தி.மு.க.வின் உயர்மட்ட அளவிலேயே விரிசல் சரியாகாத நிலை வெளிப்பட்டிருப்பது டெல்லிக்கு மிக பெரிய வசதியாக போய்விட்டது! என்கிறார்கள். தங்களுக்கு எதிராக கருத்துக்களை போட்டுடைக்கும் நபர்களின் ரகசியங்களை அதே கட்சிக்குள் இருக்கும் அவர்களின் எதிரிகள் வாயிலாக கறந்து தனித்தனி ஃபைல்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. 

அதேபோல் தி.மு.க.வும் இந்த பிளவை வெகு சரியாக பயன்படுத்திக் கொள்ள துவங்கியுள்ளது. அ.தி.மு.க.வில் எந்தந்த மாவட்டத்தில் யாருக்கு யார் எதிரி? என்பதையும், யாரை வளைத்தால் அம்மாவட்ட வி.ஐ.பி.க்கு செக் வைக்கலாம்? என்பதையும் தெளிவாக கணித்து லிஸ்டே போட்டுள்ளனர். சில இடங்களில் அ.தி.மு.க.வின் வி.ஐ.பி.க்கு குடைச்சல் கொடுக்க வல்லவர்! என்று தினகரன் அணி புள்ளிகளையும் வைத்து  பட்டியலை பகுமானமாக தயாரித்துள்ளதுதான் மேட்டரே. 

அந்த வகையில் கரூரில் தம்பித்துரைக்கு சரியான எதிரி செந்தில் பாலாஜி, ஈரோட்டில் செங்கோட்டையனுக்கு  எதிரி தோப்பு வெங்கடாசலம், திருப்பூரில் உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு எதிரி ஆனந்தன், கோவையில் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரி பொள்ளாச்சி ஜெயராமன், மதுரை வட்டாரத்தில் செல்லூர் ராஜூக்கு எதிரி ஆர்.பி.உதயகுமார், தூத்துக்குடியில் கடம்பூர் ராஜூவுக்கு எதிரி எஸ்.பி.சண்முகநாதன், சேலத்தில் எடப்பாடியாரின் ஆதரவுகளுக்கு ஆப்படிக்க முயலும் செம்மலை, நீலகிரியின் கட்சியை துண்டாட துணிந்த புத்திசந்திரன்...என்று தெளிவான லிஸ்ட்டை தயாரித்து தயார் செய்துள்ளார் ஸ்டாலின். 

அ.தி.மு.க.வின்  உள் ஓட்டைகள் பற்றி தி.மு.க. மற்றும் பி.ஜே.பி. என இரண்டு கட்சிகளும் தங்கள் கையில் வைத்திருக்கும் லிஸ்டை வைத்து என்ன கூத்துக்களை நடத்திடப்போகிறார்கள்? என்பதுதான் சஸ்பென்ஸே.

click me!