
நான் எப்போ வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்” இது சூப்பர் ஸ்டார் ரஜினியின் மிக பிரபலமான டயலாக். இது திரைப்படங்களுக்கு பொருந்துவது மட்டுமல்ல, ரஜினியில் அரசியல் வரவுக்கும் கனக்கச்சிதமாக பொருந்தக்கூடிய டயலாக் தான்.
ரஜினி எப்போது அரசியலுக்கு வாருவார் என அவரது ரசிகர்கள் பேராவலுடன் காத்துக்கொண்டிருந்த போதெல்லாம் இது மாதிரி , ஏதாவது ஒரு டயலாக்கை பேசி தப்பித்துக்கொண்டிருந்த ரஜினி தற்போது அரசியலில் அடி எடுத்து வைத்திருக்கிறார்.
என்ன தான் தன்னுடைய அரசியல் பிரவேசத்தினை அவர் உறுதி செய்தாலும் , இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை, மாதக்கணக்காக அவரது அரசியல் வரவிற்கான முன்னேற்பாடுகள் தான் போய்க்கொண்டிருக்கிறது.
ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனான பேச்சுவார்த்தை, கூட்டம் என்று தான் போகிறதே தவிர இன்னும் அவரின் கட்சி பற்றி எந்த வித அறிவிப்பும் வரவில்லை. இது இப்படி இருக்க கமல் ஒரு பக்கம் மக்கள் மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி முழு நேர அரசியல்வாதியாக மாறிவிட்டார். நாடாளுமன்ற தேர்தல் வேறு விரைவில் வரவிருக்கிறது.
இந்த நாடாளுமன்ற தேர்தலின் போதே ரஜினியின் கட்சி களம் இறங்க போகிறதா? அவர் யாருடன் கூட்டணி வைத்துக்கொள்ள போகிறார் என பல கேள்விகளுடனும், ரஜினி எப்போது கட்சி தொடங்குவார் என்ற பேராவலுடனும் காத்திருக்கின்றனர் ரஜினி ரசிகர்கள். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு பதிலளிக்கு வகையில் சமீபத்தில் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார், ரஜினியின் நண்பரும் புதிய நீதிக்கட்சி தலைவருமான ஏ.சி.சண்முகம்.
அதன் படி வரும் நவம்பர் அல்லது டிசம்பரில் ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சியை தொடங்குவார் என அறிவித்திருக்கிறார். ரஜினி தொடங்கும் அரசியல் கட்சியில் கூட்டணி அமைத்து செயல்படுவோம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே ரஜினி கட்சி தொடங்கினால் அவருடன் கூட்டணி வைத்துக்கொள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆர்வமுடன் இருக்கின்றன.
இந்நிலையில் இப்படி ஒரு அறிவிப்பை ரஜினியின் நண்பர் வெளியிட்டிருப்பது ரஜினியின் கட்சி மீது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே ரஜினி ஆன்மீக அரசியல் என்று ஒரு க்ளூ கொடுத்ததை வைத்து அவர் பாஜகவுடன் இணையப்போகிறார் என்று அரசியல் வட்டாரத்தில் ஒரு பேச்சு உலவி வருகிறது. அதே சமயம் ரஜினி கமலுடன் கூட்டணி வைத்துக்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது என்றும் கருத்துக்கள் நிலவுகிறது.
மொத்தத்தில் அவர் யாருடன் கூட்டணி வைத்துக்கொள்ள போகிறார் எனும் கேள்விக்கு விரைவிலேயே விடை தெரிந்துவிடும் என்பது மட்டும் உறுதி