பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டதால் பரிதாபம்... நட்டாற்றில் தவிக்கும் நாயுடு..!

By Thiraviaraj RMFirst Published Oct 18, 2019, 5:02 PM IST
Highlights

பா.ஜ.க கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்வது முடிந்துபோன கதை என்றும் அதற்கு இப்பொழுது இடமில்லை என்றும் கூறி விட்டார்.  இதனால் ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு நட்டாற்றில் தவித்து வருகிறார்.      

ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில், முன்னாள் ஆந்திர முதல்வர் தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வியை தழுவியது. தெலுங்கு தேசம் கட்சி 2014 முதல் 2018 வரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தது. அதற்கு முன் 1999 முதல் 2005 வரையிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தது.

அடுத்து அவர் போட்ட கணக்கு தான் அவருக்கு ஆப்பு வைத்து விட்டது. பிரதமர் மோடியை எதிர்த்தால், ஆந்திர தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று எண்ணிய சந்திரபாபு நாயுடு பிரதமர் மோடியையும் , பா.ஜ.க.,வையும் கடுமையாக எதிர்த்தார். 2018 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியவும் வந்தார்.

தெலுங்கு தேசம் கட்சி தொடங்கிய காரணமே காங்கிரஸ் எதிர்ப்புதான். ஆனால், இந்த சித்தாந்தத்திற்கு மாறாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த தேர்தலில் சந்திரபாபு நாயுடு காங்கிரஸ் கட்சியிடம் கூட்டணி வைத்தார். இதனால் அந்த கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. அதற்கு பின் அந்த கூட்டணியை விட்டு விலகிவந்த பின், ஆந்திர மாநில தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் தெலுங்கு தேசம் கட்சி படும் தோல்வியை சந்தித்தது.

அதன் பிறகே தனது தவறை உணர தொடங்கியுள்ளார் சந்திரபாபு நாயுடு. ’’பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியை முறித்துக்கொண்டது தவறு. அதனால்தான்  தேர்தலில் தோற்றோம்’’என்றும் அவர் வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால், பாஜக மீண்டும் இவரை கூட்டணிக்குள் சேர்த்துக் கொள்ளும் நோக்கத்தில் இல்லை. தேர்தல் சமயத்திலே பாஜக தலைவர் அமித் ஷா நாயுடுவிற்கு கதவு மூடப்பட்டுவிட்டது என்று கூறினார்.

அதேபோல் இப்பொழுது ஆந்திர பிரதேச பாஜக தலைவர் கண்ணா லக்ஷ்மிநாராயணா நாயுடு பா.ஜ.க கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்வது முடிந்துபோன கதை என்றும் அதற்கு இப்பொழுது இடமில்லை என்றும் கூறி விட்டார்.  இதனால் ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு நட்டாற்றில் தவித்து வருகிறார்.      

click me!