பா.ஜ.கவுடன் தான் கூட்டணி மா.செக்களிடம் உறுதிப்படுத்திய அ.தி.மு.க பெருந்தலைகள்!

By Selva KathirFirst Published Feb 9, 2019, 9:48 AM IST
Highlights

கூட்டம் முடிந்த பிறகு மாவட்டச் செயலாளர்கள் பலர் எடப்பாடி, ஓ.பி.எஸ் மற்றும கே.பி.முனுசாமியுடன் பேசி விட்டு சென்றனர். அப்போது பா.ஜ.கவுடன் தான் கூட்டணி என பெருந்தலைகள் மாவட்டச் செயலாளர்களிடம் கூறியுள்ளனர். நம்பிக்கையுடன் தேர்தல் பணியாற்றினால் தி.மு.கவை வீழ்த்தலாம் என்று கூறி அவர்களை அ.தி.மு.க பெருந்தலைகள் அனுப்பி வைத்துள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவுடன் தான் கூட்டணி என்று மாவட்டச் செயலாளர்களிடம் அ.தி.முக. பெருந்தலைகள் கூறி அனுப்பியுள்ளனர்.

நான்கு மணிக்கு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் போதே மணி நான்கை தாண்டியிருந்தது. ஆனால் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் சரியாக மூன்றே முக்கால் மணிக்கு எல்லாம் ராயப்பேட்டை அ.தி.மு.க அலுவலகத்திற்கு வந்துவிட்டனர். வந்தது முதலே யாருடன் கூட்டணி என்பது பற்றி தான் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டனர். 

பா.ஜ.கவுடன் கூட்டணி என்றாலும் கூட பா.ம.க., நம்முடன் வர வேண்டும் என்று வடமாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் தங்கள் தரப்பு வேண்டுகோளை அங்கிருந்தவர்களிடம் மிகவும் சீரியசாக பேசிக் கொண்டிருந்தனர். விஜயகாந்த் கூட்டணிக்கு வந்தால் பிரேமலதா பிரச்சாரத்தின் மூலம் தி.மு.கவை ஒரு வழி செய்துவிடலாம் என்று சிலர் தங்களுக்குள் கூறிக் கொண்டிருந்தனர். இதே போல் திமு.க கூட்டணியில் ஏதேனும் பிரச்சனை என்றாலும் நமக்கு தான் சாதகம் என்று அவர்கள் கூறியதை கேட்க முடிந்தது. 

எடப்பாடி பழனிசாமி வந்த உடன் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், மதுசூதனன், ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் என அனைவரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்தே பேசினர். ஆனால் மாவட்டச் செயலாளர்கள் ஓ.பி.எஸ் பேச்சை விட எடப்பாடி பேச்சுக்கு தான் முக்கியத்துவம் கொடுத்தனர். ஓ.பி.எஸ் பேசும் போது மாவட்டச் செயலாளர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டும் செல்போன்களை நோண்டிக் கொண்டும் இருந்தனர்.

 

ஆனால் எடப்பாடி பேசிய போது பின்டிராப் சைலன்ட் இருந்துள்ளது. அனைவருமே அவர் என்ன சொல்கிறார் என்று உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் எடப்பாடி கூட்டணி குறித்து வாய்திறக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தல் செலவு தொடர்பாக மட்டுமே அதிக நேரம் எடப்பாடி பேசியதாக சொல்கிறார்கள். ஜெயலலிதா இருந்த போது எந்த முறையில் செலவு செய்யப்பட்டதொ அதே முறையை தற்போதும் பின்பற்ற வேண்டும் என்பது தான் எடப்பாடியின் பேச்சின் சாராம்சமாக இருந்தது. 

இருந்தாலும் கூட்டம் முடிந்த பிறகு மாவட்டச் செயலாளர்கள் பலர் எடப்பாடி, ஓ.பி.எஸ் மற்றும கே.பி.முனுசாமியுடன் பேசி விட்டு சென்றனர். அப்போது பா.ஜ.கவுடன் தான் கூட்டணி என பெருந்தலைகள் மாவட்டச் செயலாளர்களிடம் கூறியுள்ளனர். நம்பிக்கையுடன் தேர்தல் பணியாற்றினால் தி.மு.கவை வீழ்த்தலாம் என்று கூறி அவர்களை அ.தி.மு.க பெருந்தலைகள் அனுப்பி வைத்துள்ளனர்.
 

click me!