50 வார்டுகள் வேண்டும்..! சென்னை மாநகராட்சி தேர்தலில் பாஜகவின் அதிரடி மூவ்.. என்ன செய்யும் அதிமுக?

By Asianet TamilFirst Published Jan 27, 2022, 10:23 AM IST
Highlights

அதிமுக கூட்டணியில் பாஜக, தமாகா ஆகியவை மட்டுமே முக்கியமான கட்சிகளாக உள்ளன. இந்த முறை அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணத்தில் பாஜக உள்ளது. தலைநகர் சென்னையில் கணிசமாக வேட்பாளர்களை களம் இறக்கவும் பாஜக முனைப்பில் உள்ளது.

சென்னை மாநகராட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் குறைந்தபட்சம் 50 வார்டுகளை பாஜக கேட்டு வருவதாக அக்கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. பிப்ரவரி 19 அன்று தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஏற்கெனவே திரைமறைவில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்து பேசி வந்தன. இன்று முதல் வெளிப்படையாக பேச்சுவார்த்தைகளை முடித்து அடுத்த சில நாட்களுக்குள் வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும். அதிமுக கூட்டணியில் பாஜக, தமாகா ஆகியவை மட்டுமே முக்கியமான கட்சிகளாக உள்ளன. இந்த முறை அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணத்தில் பாஜக உள்ளது. தலைநகர் சென்னையில் கணிசமாக வேட்பாளர்களை களம் இறக்கவும் பாஜக முனைப்பில் உள்ளது.

சென்னை மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளன.  சென்னை மாநகராட்சி மேயர் பொறுப்பு பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட் தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜனை பாஜக களமிறக்கியுள்ளது. சென்னை வார்டுகள் குறித்து பேச்சுவார்த்தையில் கராத்தே தியாகராஜன் தலைமையில்தான் பாஜகவினர் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்தத் தேர்தலில் 50 வார்டுகளில் போட்டியிட பாஜக முடிவு செய்து, அதன்படி அதிமுகவிடம் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை தங்களின் கோட்டை என்று திமுகவினர் பெருமையாகப் பேசுவார்கள். எனவே, சென்னையில் அதிக வார்டுகளில் போட்டியிடுவது தங்கள் கட்சி வளர்ச்சிக்கு உதவும் என்றும் பாஜக நினைக்கிறது. மேலும் பெரிய நகரங்களின் மாநகராட்சித் தேர்தலுக்கு பாஜக கட்சி தலைமையும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. அண்மையில் நடந்த ஹைதராபாத், சண்டிகர் மாநகராட்சித் தேர்தலில் பாஜக ஆதிக்கம் செலுத்தியது. எனவே, சென்னையிலும் அதிக வார்டுகளில் போட்டியிட வேண்டும் என்பதில் கட்சியின் தலைமை கறார் காட்டும் என்பதால், குறைந்தபட்சம் 50 வார்டுகளில் போட்டியிடும் முடிவில் பாஜக உள்ளது.  

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வடசென்னை தொகுதியை தேமுதிகவுக்கும் மத்திய சென்னையை பாமகவுக்கும் அதிமுக தள்ளிவிட்டது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெற்றது. அப்போது 3 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக ஒதுக்கியது. மாநகராட்சி, நகராட்சி தேர்தல்களில் கடந்த காலங்களில் ஆளுங்கட்சியே ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கின்றன. இந்த முறையும் 100 சதவீத வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் திமுக உள்ளது. எனவே, எதிர்க்கட்சிகளுக்கு தேர்தல் சவாலாக இருக்கும். இதை வைத்து அதிமுகவுடன் பேசி 50 வார்டுகளை பெற்றுவிடலாம் என்று பாஜக கணக்குப் போடுகிறது. வட இந்தியர்கள் அதிகம் வசிக்கும் வார்டுகளை கேட்டு பெறுவது என்ற எண்ணத்திலும் அக்கட்சி உள்ளது. ஆனால், இது நடக்குமா என்பது ஒரு சில நாட்களில் தெரிந்துவிடும்.

click me!