திருந்தாத அரசு.. எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பேனரில் மோதி இளைஞர் பலி..! பதில் சொல்லுமா பழனிசாமி அரசு..?

First Published Nov 25, 2017, 4:58 PM IST
Highlights
bike collide in banner young man dead in kovai


கோவை அவிநாசி சாலையில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்காக வைக்கப்பட்ட பேனரில் மோதி பரிதாபமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசின் மீது மக்களுக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, அரசு விழாவாக அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. வரும் டிசம்பர் 3-ம் தேதி கோவையில் நடைபெற உள்ளது. அதற்காக நேற்று கோவையில் பேனர்களும் அலங்கார வளைவுகளும் அமைக்கும் பணி நடைபெற்றது.

கோவை விமான நிலையத்திலிருந்து வ.உ.சி மைதானம் வரை கோவை-அவிநாசி சாலையில் சாலையை மறித்து அலங்கார வளைவுகளும் பேனர்களும் அமைக்கும் பணி நேற்று மாலை நடைபெற்றது. கோவை-அவிநாசி சாலையில், இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் பேனர் அமைக்கும் பணி நடைபெற்றது.

இதையடுத்து நேற்று இரவு அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற ரகு, சாலையை ஆக்கிரமித்திருந்த பேனரில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட பேனரின் கம்பு சாலையில் நீட்டிக்கொண்டிருந்திருக்கிறது. இருசக்கரவாகனத்தில் சென்ற ரகு என்ற இளைஞர் அந்த கம்பில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

ரங்கசாமி கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்த ரகு, அமெரிக்காவில் பணிபுரிந்துவந்துள்ளார். திருமணத்திற்கு பெண் பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்த ரகு, பேனரில் மோதி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞரின் இறப்பை அடுத்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கோவை மாநகராட்சி அதிகாரிகள், அலங்கார வளைவுகளையும் பேனர்களையும் அகற்றி வருகின்றனர். இளைஞர் உயிர் பறிபோனபிறகும்கூட ஆளும்கட்சி தரப்பில் பேனரை அகற்றக்கூடாது என்றுதான் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியுள்ளனர்.

பேனர் வைக்காதீங்க.. வைக்காதீங்கனு நீதிமன்றம் என்னதான் வலியுறுத்தினாலும், அரசு தரப்பில் சுயவிளம்பரம் செய்வதை தடுத்து நிறுத்தமுடியவில்லை. 

சாலையையோ நடைபாதைகளையோ ஆக்கிரமித்து பேனர்கள் வைக்கக்கூடாது என்ற மக்களின் குரல் இதுவரை அரசின் காதில் விழவில்லை. இப்போது ஒரு உயிர் பறிபோகிவிட்டது. இனிமேலாவது அரசு திருந்துமா..? பேனர் கலாச்சாரத்திற்கு முடிவு கட்டுமா..? அல்லது இனியும் பல உயிர்களை காவுவாங்கும் வகையில் பேனர்களை வைக்குமா..? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

அமெரிக்காவிலிருந்து திருமணத்திற்கு பெண் பார்க்க வந்த இளைஞரின் உயிரைப்பறித்தது பேனர் அல்ல. அதை வைத்த அரசுதான்.. இளைஞரின் அகால மரணத்துக்கு அரசு பொறுப்பேற்குமா..? பொறுப்பேற்றாலும்.. அதனால் இளைஞரை இழந்த குடும்பத்திற்கு என்ன பலன்..? திரும்ப வரவா போகிறார் ரகு..?

எப்போதுதான் இந்த கொடுமைக்கெல்லாம் முடிவு கட்டப்படுமோ..?
 

click me!