பணத்தை வாரியிறைத்து, அதிகாரத்தை பயன்படுத்தி வாக்குகளை வேட்டையாடுவார்கள்..! சீமான் காட்டம்..!

By Manikandan S R SFirst Published Dec 21, 2019, 5:30 PM IST
Highlights

மற்ற கட்சிகள் பணத்தை வாரியிறைத்து, அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி வாக்குகளை வேட்டையாடும் சதிச்செயலை அரங்கேற்ற அணியமாகி நிற்கிறது. இவற்றிற்கு முற்றிலும் நேர்மாறாக, நற்கருத்துகளை மக்களிடையே விதைத்து, அதன்மூலம் வாக்குகளைப் பெற்று மக்களாட்சியை நிலைநிறுத்தப் போராடிக் கொண்டிருக்கிறது நாம் தமிழர் கட்சி.

நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல் குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் வருகின்ற டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாக நடைபெறவிருக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வழமைபோல மக்களையும், மகத்தான தத்துவத்தையும் நம்பி தனித்துக் களமிறங்கியுள்ளது நாம் தமிழர் கட்சி. நமது கட்சி சார்பாக ‘விவசாயி’ சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும், கிராமங்கள்தோறும் நேரிடையாக மக்களைச் சந்தித்து, நமது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் எடுத்துரைத்து பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர்.

மற்ற கட்சிகள் பணத்தை வாரியிறைத்து, அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி வாக்குகளை வேட்டையாடும் சதிச்செயலை அரங்கேற்ற அணியமாகி நிற்கிறது. இவற்றிற்கு முற்றிலும் நேர்மாறாக, நற்கருத்துகளை மக்களிடையே விதைத்து, அதன்மூலம் வாக்குகளைப் பெற்று மக்களாட்சியை நிலைநிறுத்தப் போராடிக் கொண்டிருக்கிறது நாம் தமிழர் கட்சி. மண்ணின் மீதும், மக்கள் மீதும் பற்றுறுதி கொண்ட, தத்துவத்தின்பால் ஈர்க்கப்பட்டு அரசியற்படுத்தப்பட்ட ஒரு இளையோர் கூட்டம் எவ்வித எதிர்பார்ப்புமற்று மாற்று அரசியலுக்காய் நாளும் உழைத்துக் கொண்டிருக்கிறது. அதற்குத் தோள்கொடுத்து உதவ வேண்டியதும், ஒரு நல்லரசியல் துளிர்விட துணைநிற்க வேண்டியதும் சனநாயகப் பற்றாளர்களின் தலையாயக் கடமையாகும்.

எவ்விதப் பின்புலமும் இல்லாத எளிய மனிதர்களால் கட்டப்பட்டு, உருவாக்கப்பட்டிருக்கிற மக்கள் இராணுவமான நாம் தமிழர் கட்சி எனும் பாதுகாப்புப் பெரும்படையை வளர்த்து வலிமையடையச் செய்ய ஒவ்வொருவரும் தங்களால் இயன்றப் பங்களிப்புகளைச் செய்ய முன்வர வேண்டும். எவ்விதத் தத்துவ தடம்பிறழ்வோ, கொள்கை சறுக்கலோ, அரசியல் சமரசமோ எதுவுமற்று நன்னெறியோடு நேர்மையானப் பாதையில் நாம் தமிழர் கட்சி பயணித்தாலும் எப்போதும் பொருளாதார நெருக்கடியே நமது செயற்பாட்டை மட்டுப்படுத்துகிறது. வளர்ச்சியில் ஒரு தேக்கநிலையை உருவாக்குகிறது. பொருளாதாரப் பலமும், ஊடக வெளிச்சமும் மட்டும் நம்மிடம் இருந்திருந்தால் நாம் அடைந்திருக்கிற வளர்ச்சியைவிடப் பன்மடங்கு வளர்ச்சியை அடைந்திருப்போம் என்பது எவராலும் மறுக்கவியலா உண்மை.

நடைபெற்றுவரும் உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரையில் கூட வேட்பாளர்களின் பரப்புரை வாகனங்களுக்கான எரிபொருள், உணவு, தேர்தல் பணிமனை, மேடை ஏற்பாடு, ஒலிவாங்கி, ஒலிப்பெருக்கி போன்ற இன்றியமையாச் செலவுகளுக்கே போதிய நிதியின்றி திணறிக் கொண்டிருக்கிறோம். ஆகவே, பொருளாதாரப் பலம் படைத்த இனமானத்தமிழர்களும், மாற்று அரசியலை விரும்பி நிற்கும் சனநாயகவாதிகளும் தங்களால் இயன்ற நிதியுதவி வழங்கி நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு உறுதுணையாக நிற்க வேண்டும் என உள்ளன்போடும், உரிமையோடும் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், இராணிபேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் மற்றும் இதர மாவட்டங்களுக்குட்பட்ட நகர்புறங்களைச் சேர்ந்த நாம் தமிழர் உறவுகள் அனைவரும், தங்கள் அருகாமையில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபடுமாறும், களத்தில் நேரிடையாக பங்கேற்க முடியாத உறவுகள் தங்களால் இயன்ற நிதியுதவி அல்லது பொருளுதவி வழங்கி களத்தில் இருக்கும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை வலிமைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு சீமான் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

click me!