வரலாறு உங்களை மன்னிக்காது தமிழிசை! குரல் கொடுத்த பாரதிராஜா…

By Selvanayagam PFirst Published Sep 4, 2018, 9:51 AM IST
Highlights

மாணவி சோபியாவிடம் பா... தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அநாகரீகமாக நடந்து கொண்டிருப்பதாக, இயக்குனர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியை சேர்ந்த மருத்துவர் சாமி என்பவரின் மகள் சோபியா; கனடாவில் படித்து வரும் அவர், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சென்ற விமானத்தில் பயணித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவரை பார்த்ததும், பாஜக ஒழிக என்று சோபியா கோஷமிட்டார்.

இதையடுத்து, தமிழிசைக்கும் அந்த பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த இளம்பெண்ணுக்கு எதிராக விமான நிலைய அதிகாரிகளிடம், தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளித்தார். அதன் பேரில் சோபியாவை போலீசார் கைது செய்தனர், நீதிபதி உத்தரவின் பேரில், 15 நாட்கள் நீதிமன்ற காவலில், சோபியா அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், தமிழிசையின் செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனக் குரல்கள் எழுந்தன. இயக்குனர் பாரதிராஜாவும், இதை கண்டித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்த ஆடியோ தகவலில், “என் இனிய சகோதரி தமிழிசைக்கு, பாசத்துடன் பாரதிராஜா. பா.ஜ.க.வில் பெரிய பதவியில் இருக்கிறீர்கள். பொது வாழ்க்கையில் ஈடுபடும் போது எதையும் பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஜனநாயக அரசில் கருத்து எல்லோருக்கும் உள்ளது. உங்களுடன் பயணித்த சோபியாவுக்கு, தான் பிறந்த தூத்துக்குடி மண்ணில் நிகழ்ந்த சம்பவம் ஏற்படுத்திய பாதிப்பே, தைரியம்மிக்க தமிழச்சியாக, உங்கள் முன் குரல் கொடுக்க வைத்தது. உங்கள் தரப்பு நியாயத்தை, அவரை அழைத்து நீங்கள் விளக்கியிருக்க வேண்டுமல்லவா? மாறாக, அவர் மீது புகார் கொடுத்து, உள்ளே தள்ள வேண்டும் என்பது, மன்னிக்க வேண்டும், எவ்வளவு அநாகரீகமான விஷயம்” என்று கூறியுள்ளார்.

click me!