
வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக இயக்குநர் பாராதிராஜா மீது தொடரப்பட்ட வழக்கில், முகாந்திரம் இருந்தால் பாரதிராஜா மீது வழக்கு பதியலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அண்மையில் ராஜபாளையத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் குறித்து கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார். ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் கருத்துக்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது.
வைரமுத்துவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர், ஆண்டாள் சன்னதியில் கவிஞர் வைரமுத்து, நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும், வைரமுத்து மன்னிப்பு கேட்கும் வரை உண்ணாவிரதமும் இருந்து வந்தார். பாஜகவைச் சேர்ந்தவர்கள், ஜீயரிடம் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கூறியிருந்தனர். இந்த நிலையில்
உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார்.
ஜனவரி 26 ஆம் தேதி அன்று திருச்செங்கோடு கூட்டத்தில் பேசிய ஜீயர், ஆண்டாளை விமர்சிப்பவர்கள் மீது சோடா பாட்டில் வீச தெரியும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
ஜனவரி 18 ஆம் தேதி அன்று, சென்னையில் நடந்த விழா ஒன்றில் இந்து மத கடவுளான விநாயகரை இறக்குமதி கடவுள் என்று இயக்குநர் பாரதிராஜா பேசியிருந்தார். கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக போராடும் இந்துக்களை அச்சுறுத்தும் வகையில், நாங்களும் ஆயுதம் எடுப்போம் என்றும் வன்முறையில் ஈடுபட தயங்க மாட்டோம் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
கவிஞர் வைரமுத்துவுக்கு ஆதரவாக இயக்குநர் பாரதிராஜா பேசியது குறித்து, இந்து மக்கள் கட்சி, சென்னை வடபழனி போலீசில் புகார் அளித்தது. ஆனால், இந்த புகாரை போலீசார் ஏற்க மறுத்ததாக கூறி, இந்து மக்கள் கட்சியின் பிரமுகர் நாராயணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ரமேஷ், பாரதிராஜா மீது முகாந்திரம் இருந்தால் வழக்கு பதியலாம் என்று சென்னை, வடபழனி போலீசாருக்கு உத்தரவிட்டார்.