நான் ஒரு சாதாரண விவசாயி.. அறிவாலயம் அமைச்சர்களைப் போல ஊழல் செய்யவில்லை.. திமுகவை பங்கம் செய்த அண்ணாமலை..!

By vinoth kumarFirst Published Oct 27, 2021, 12:23 PM IST
Highlights

 சார், 500 கோடி ரூபாய்க்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றீர்கள். நான் ஒரு சாதாரண விவசாயி. என்னிடம் இருப்பது சில ஆடுகள் மட்டும்தான்.

நான் ஒரு சாதாரண விவசாயி என்னிடம் இருப்பது சில ஆடுகள் மட்டும்தான் என பிஜிஆர் எனர்ஜி அனுப்பிய நோட்டீஸ்க்கு அண்ணாமலை பதிலளித்துள்ளார். 

சமீபத்தில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை;- தமிழகத்தில் ஒரு திவாலான எனர்ஜி கம்பெனி 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டரை தமிழக மின்சார வாரியத்துடன் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறது. ஆளும்கட்சிப் பிரமுகர் ஒருவர் அந்த கம்பெனியை விலைக்கு வாங்கி அதனை தமிழக மின்சார வாரியத்திடம் இருந்து இந்த ஒப்பந்தத்தை செய்ய முடிவு செய்திருக்கிறார். அந்தக் கம்பெனியின் பெயரை தற்போது வெளியிட விரும்பவில்லை. இது நீடித்தால் இந்த ஊழல் தொடர்பான ஆவணங்களை ஒவ்வொன்றாக வெளியிடுவோம் என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்சார வாரியத்தில் ஊழல் நடந்ததற்கான ஆதாரங்களை 24 மணி நேரத்திற்குள் வெளியிட வேண்டும். இல்லையெனில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதனையடுத்து, மின்சார வாரியம் சார்பில் வழங்கப்பட்ட பணப்பட்டுவாடா விவரங்கள் கொண்ட எக்ஸல் சீட் ஒன்றை அண்ணாமலை டுவிட்டரில் வெளியிட்டார். இதுகுறித்து இருவருக்கும் இடையே டுவிட்டரில் வார்த்தை போர் நடைபெற்றது.

இந்நிலையில். பிஜிஆர் நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் தினேஷ் குமார் என்பவர் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், தங்களது நிறுவனம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மின்திட்டப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் திவாலான நிறுவனம் என்றும் தங்கள் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்துள்ளார்கள் என்று அவதூறாக டுவிட்டரில் அண்ணாமலை கருத்து தெரிவித்திருந்தார். அண்ணாமலை தெரிவித்த தகவல்கள் அனைத்தும் ஆதாரமற்றவை, பொய்யானவை. பிஜிஆர் நிறுவன இயக்குநர் ரமேஷ்குமார் குறித்து டுவிட்டரில் அவதூறாகப் பதிவிட்டு அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதால் 500 கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என்று கோரியுள்ளது.

இந்த வழக்கறிஞர் நோட்டீஸை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அண்ணாமலை;- சார், 500 கோடி ரூபாய்க்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றீர்கள். நான் ஒரு சாதாரண விவசாயி. என்னிடம் இருப்பது சில ஆடுகள் மட்டும்தான். அறிவாலயத்தில் இருக்கும் அமைச்சர்களைப் போல ஊழல் செய்து கொடுப்பதற்கு என்னிடம் எதுவுமில்லை. நம்முடைய நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இருக்கிறது. அங்கு சந்திப்போம் என்று பதிவிட்டுள்ளார்.

click me!