ஜெ.,வின் கைரேகை வழக்கு.. அதிர்ச்சி அளித்த சிறை அதிகாரியின் விளக்கம்..!

First Published Dec 8, 2017, 2:52 PM IST
Highlights
bengaluru jailer explain in jayalalitha thumb case in high court


பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் ஜெயலலிதாவின் கைரேகை வாங்கப்படவில்லை என சிறைத்துறை அதிகாரி மோகன்ராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.

கடந்த ஆண்டு அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. மூன்று தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

திருப்பரங்குன்றத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவுடன் கூடுதல் மனு ஒன்றையும் தாக்கல் செய்தார். அதில், ஜெயலலிதா சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அதிமுக வேட்பாளராக ஏ.கே.போஸையும், அவருக்கு இரட்டைஇலை சின்னம் ஒதுக்கக்கோரியும் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் ஜெயலலிதா தனது இடதுகை பெருவிரல் ரேகையை தேர்தல் ஆணையத்தின் படிவம்- ஏ மற்றும் படிவம்-பி ஆகியவற்றில் பதிவு செய்து கொடுத்துள்ளார். அதை அரசு மருத்துவரான பாலாஜி சான்றொப்பம் செய்துள்ளார். இந்த படிவங்களில் ஜெயலலிதா சுய நினைவோடு தான் கைரேகை வைத்தாரா என்பது சந்தேகமாக உள்ளது. எனவே உரிய மருத் துவ ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும். அத்துடன் ஜெயலலிதா கைரேகையின் உண்மைத்தன்மை குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் விசாரித்து வருகிறார். இந்த வழக்கில் ஏற்கனவே தேர்தல் ஆணைய அதிகாரிகள், மருத்துவர் பாலாஜி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு கடந்த மாதம் 24ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதாவின் கைரேகை தொடர்பான உண்மைத்தன்மையை ஆராய, ஜெயலலிதாவின் ஆதார் அட்டை இருந்தால், அதை தாக்கல் செய்ய வேண்டும் என ஆதார் ஆணையத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2014-ம் ஆண்டு ஜெயலலிதா, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, அவரது கைரேகை பெறப்பட்டிருக்கும் என்பதால், ஜெயலலிதாவின் கைரேகை மற்றும் அவைதொடர்பான ஆவணங்களுடன் பரப்பன அக்ரஹார சிறை கண்காணிப்பாளரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை டிசம்பர் 8-ம் தேதிக்கு(இன்று) நீதிபதி வேல்முருகன் ஒத்திவைத்தார்.

அதன்படி, இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை அதிகாரி மோகன் ராஜன், சிறையின் பதிவு கையேட்டுடன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். அப்போது, ஜெயலலிதா சிறைக்கு வந்த போது அவரிடம் கைரேகை எதுவும் பெறப்படவில்லை என தெரிவித்தார்.

இதனால், ஜெயலலிதாவின் கைரேகையை ஒப்பிட்டுப் பார்க்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
 

click me!