
மீனவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக முதல்வர் உறுதியளித்தது மகிழ்ச்சியளிப்பதாக சென்னையில் போராட்டம் நடத்திய மீனவர்களின் பிரதிநிதி ரூபேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடலுக்கு சென்ற மீனவர்கள் பலர் கரை திரும்பவில்லை. கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் கரை ஒதுங்கிய மீனவர்களை மீட்டு கொண்டுவரும் பணிகளும் நடந்துவருகின்றன.
இந்திய கப்பற்படை, கடலோர காவற்படை மற்றும் விமானப்படை ஆகியவை மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுவருகின்றன. மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் கரை ஒதுங்கியுள்ள மீனவர்களை மீட்கும் பணிகளும் நடந்துவருகின்றன.
கடலில் மாயமான மீனவர்களை உடனடியாக மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை பட்டினப்பாக்கம், நொச்சிகுப்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவ மக்கள் 1000 பேர், தலைமை செயலகத்தை நோக்கி பேரணியாக சென்றனர். ஆனால், முதல்வரை சந்தித்து கோரிக்கை மனுவை அளிக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்து மீனவர்களை போலீசார் தடுத்தனர்.
அதனடிப்படையில், போராட்டம் நடத்திய மீனவர்களின் பிரதிநிதிகள் முதல்வரை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர். மாயமான குமரி மாவட்ட மீனவர்களை உடனடியாக மீட்டுத்தர வேண்டும், இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வரிடம் வலியுறுத்தினர்.
முதல்வருடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மீனவர்களின் பிரதிநிதி ரூபேஷ்குமார், மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதல்வர் உறுதியளித்ததாக மகிழ்ச்சி தெரிவித்தார்.