பிரியாணி திருவிழா நடத்தினால் அதில் பீப் பிரியாணியை தவிர்க்க கூடாது.. ஆணயம் போட்ட அதிரடி உத்தரவு.

By Ezhilarasan BabuFirst Published Aug 1, 2022, 7:16 PM IST
Highlights

அரசு நடத்தும் பிரியாணி திருவிழாக்களில் மாட்டிறைச்சி பிரியாணி தவிர்க்கப்பட கூடாது என்றும், அப்படி தவிர்க்கப்பட்டால் அது பாகுபாட்டிற்கு வழிவகுக்கும் என்று தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசு நடத்தும் பிரியாணி திருவிழாக்களில் மாட்டிறைச்சி பிரியாணி தவிர்க்கப்பட கூடாது என்றும், அப்படி தவிர்க்கப்பட்டால் அது பாகுபாட்டிற்கு வழிவகுக்கும் என்று தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இனிவரும் விழாக்களில்  மாவட்ட நிர்வாகம் பாகுபாட்டிற்கு வழிவகுக்கக் கூடாது என்றும், அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் ஆம்பூரில் நடைபெற இருந்த பிரியாணி  திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணி புறக்கணிக்கப்பட்ட நிலையில் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் நல ஆணையம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல மக்கள் நல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பல விமர்சனங்களும் அரசுக்கு எதிராக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த மே மாதம் 13, 14, 15 ஆகிய தேதிகளில் ஆம்பூரில் பிரியாணி திருவிழா நடத்தப்படும் என அந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. பிரியாணி என்பது ஆட்டுக்கறி,  மாட்டுக் கறி, கோழி கறி ஆகியவற்றை உள்ளடக்கியதுதான். ஆனால் மாவட்ட நிர்வாகம் பீப் பிரியாணி போட தடை விதித்தது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணி தவிர அனைத்து வகை பிரியாணி களும் வழங்கப்படும் என கூறியிருந்தார்.

பீப் பிரியாணி தவிர்க்கப்படுவதற்கான காரணத்தைக் கூறவில்லை, இதற்கு பல்வேறு தலித் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன, பீப் பிரியாணியை தவிர்த்துவிட்டு திருவிழா நடத்தினால் அந்த அரங்கத்திற்கு எதிரிலேயே இலவசமாக பீப் பிரியாணி போடுவோம் என எச்சரித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணியின் சார்பில் இதுதொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்டோர் உள்ளனர், மட்டன் சிக்கன் சாப்பிடாத எங்களுக்கு மாட்டிறைச்சிதான் முக்கிய உணவு, எனவே உணவுத் திரு விழாவில் அதைத் தவிர்ப்பது எங்கள்மீது தீண்டாமையை உழிழும் செயல்.

உளவியல் ரீதியாக இது எங்கள் மீது நடத்தப்படும் வன்முறை, எங்களுக்கு உரிய நீதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக மட்டன், சிக்கன் பிரியாணி போடப்படும் நிலையில் பீப் பிரியாணி மட்டும் தவிர்ப்பது, அங்கு வசிக்கும் மக்களுக்கு எதிரான செயல், எனவே உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என ஆட்சியருக்கு எதிராக அறிக்கை அனுப்பி ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணையம் விளக்கம் கேட்டது. அதற்கு அவர் பன்றி இறைச்சி குறித்து கருத்து தெரிவித்திருந்தார், ஆம்பூரில் உள்ள இஸ்லாமியர்களின் ஆதரவை பெறுவோம் என்பதற்காக அவர் அப்படி பேசியதாக கூறப்பட்டது. 

இந்நிலையில் இது தொடர்பாக உத்தரவிட்டுள்ள  தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் பிரியாணி திருவிழாக்களில் மாட்டிறைச்சி பிரியாணியை தவிர்க்கக்கூடாது, அப்படி தவிர்த்தால் அது  பாகுபாட்டிற்கு வழிவகுக்கும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன், இனிவரும் காலங்களில் நடைபெறும் திருவிழாக்களில் மாவட்ட நிர்வாகம் பாகுபாட்டிற்கு வழிவகுக்கக் கூடாது என எச்சரித்து ஆணை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை தலைமைச் செயலாளர் பொதுத்துறை செயலாளர் அனைத்து  மாவட்ட உயர் அதிகாரிகளுக்கு அடுப்பவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 

click me!