ரேஷன் கடையில் அரிசி வாங்குவது போல் மத்திய அரசிடம் தடுப்பூசி வாங்கும் நிலைதான் உள்ளது என்று திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் டி.ஆர்.பாலு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழ்நாட்டுக்குக் கூடுதலாக தடுப்பூசிகள் ஒதுக்க வேண்டும் என மத்தியமைச்சர் பியூஷ் கோயலிடம் வலியுறுத்தினேன். ஜூன் மாதத்தில் கூடுதலாக வழங்கவேண்டிய தடுப்பூசிகளை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை. மத்திய அரசு அளித்த அனைத்து தடுப்பூசிகளையுமே தமிழக அரசு செலுத்தியிருக்கிறது. மக்கள் தொகை அடிப்படையில் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கவில்லை. மொத்த தடுப்பூசியில் 90 சதவீதத்தை மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும்.
ரேஷன் கடையில் அரிசி வாங்குவது போல் மத்திய அரசிடம் தடுப்பூசி வாங்கும் நிலைதான் தற்போது உள்ளது. தமிழகத்துக்கு இனி வாரம் தோறும் கொரோனா தடுப்பூசி வழங்குவதாக மத்திய அரசு உறுதி அளித்திருக்கிறது. தமிழகத்தில் கொரோனாவுக்கு எதிராகத் தடுப்பூசி குறித்து தமிழக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், தடுப்பூசிதான் இல்லை. மத்திய அரசின் தடுப்பூசி கொள்கையில் வெளிப்படைத்தன்மையே இல்லை. தமிழகத்துக்கு இன்னும் 12 கோடி தடுப்பூசி டோஸ்கள் தேவை” என்று டி.ஆர்.பாலு தெரிவித்தார்.