பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது !! விழாவை புறக்கணித்த சோனியா, ராகுல் !!

By Selvanayagam PFirst Published Aug 9, 2019, 7:44 AM IST
Highlights

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு , நாட்டின் மிக உயரிய விருதான "பாரத ரத்னா' விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதை வழங்கி கௌரவித்தார். பிரணாப் முகர்ஜிக்கு மிக நெருக்கமான சோனியா மற்றும் ராகுல் காந்தி  இந்த விழாவை புறக்கணித்தனர்.

டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கான விருதை வழங்கினார். அவர்களில் பிரணாப் முகர்ஜி தனக்கான விருதை பெற்றுக்கொண்டார். 

இந்த நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மேலும் சில மத்திய அமைச்சர்கள், அஸ்ஸாம் முதல்வர் சர்வானந்த சோனோவால் ஆகியோர் கலந்துகொண்டனர். 

பாரத ரத்னா விருது, 4 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தற்போது வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு, முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக நிறுவனர் மதன்மோகன் மாளவியா ஆகியோருக்கு இந்த விருதை வழங்கி பிரதமர் நரேந்திர மோடி அரசு கெளரவித்திருந்தது. 

தற்போது பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜி, அந்த விருது பெற்ற 5-ஆவது குடியரசுத் தலைவராவார். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ராஜேந்திர பிரசாத், ஜாகிர் ஹுசைன், வி.வி. கிரி ஆகியோர் இதற்கு முன்பாக இந்த விருதைப் பெற்ற குடியரசுத் தலைவர்களாவர். 

பிரணாப் முகர்ஜி தனது 47-ஆவது வயதில் இந்தியாவின் இளம் நிதியமைச்சராக கடந்த 1982-ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். 2004-ஆம் ஆண்டு முதல் வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை, நிதித்துறை போன்ற முக்கிய துறைகளின் அமைச்சராகவும் இருந்தார்.  2012 முதல் 2017 வரையில் குடியரசுத் தலைவராக பதவி வகித்தார்.
 


ஆனால் இந்த விழாவில் காங்கிரஸ் மன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி , ராகுல் காந்தி ஆகியோர் புறக்கணித்தனர். கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். மாநாட்டில் பிரணாப் முகர்ஜி பங்கேற்றதையடுத்து அவருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஒரு இடைவெளி விழுந்துள்ளது.

click me!