காவிரியில் நுங்கும் நுரையுமாக பொங்கி வரும் புது வெள்ளம் !! கர்நாடக அணைகளில் இருந்து 1 லட்சம் கனஅடி நீர் திறப்பு !!

By Selvanayagam PFirst Published Aug 8, 2019, 11:53 PM IST
Highlights

கர்நாடகாவின்  காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விடாமல் கனமழை கொட்டி வருவதால் வியாழன் மாலை நிலவரப்படி கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு 1,02,421 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
 

கர்நாடகாவின் வடக்கு பகுதியில் பெலகாவி, பாகல்கோட்டை மற்றும் யாத்கிரி மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. அருகில் உள்ள கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மகாராஷ்டிராவின் தென் பகுதியிலும் கனமழை பெய்து வருவதால் கோதாவரி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் அளவை மீறி ஓடுகிறது. இந்த தண்ணீரும் கர்நாடகாவுக்கு வருவதால் கர்நாடகாவில் உள்ள ஆறுகளில் அதிக அளவு வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது.

வியாழன் மாலை நிலவரப்பபடி கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் 90 ஆயிரம் கன அடி நீரும், கபினி அணைக்கு அருகே உள்ள தாரகா அணையில் இருந்து வினாடிக்கு 12,000 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் கிருஷ்ணா ராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 421 கன அடி நீர் திறக்கபப்டுகிறது. எனவே மொத்தமாக கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு 1,02,421 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

கபினி அணைக்கு வரும் நீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால்  தமிழகத்தில் காவிரி கரையோர மக்கள் பாதுக்காப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதே போல் பில்லூர் அணையிலிருந்து 62,000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கினால் உப்பபள்ளம் என்ற இடத்தில் 50 க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. 

click me!