தமிழகத்தின் ‘செயல் முதலமைச்சர்’ ஆகிறார் புரோஹித்! ஆளுநரின் ஆப்ரேஷனால் அலறித்துடிக்கும் அ.தி.மு.க. வட்டாரம்...

First Published Nov 14, 2017, 11:39 AM IST
Highlights
Banwarilal Purohit will be action like Chief minister of Tamilnadu


ஆபத்பாந்தவனே ‘ஆப்பு’ நாயகனாக மாறினால் என்னவாகும்? அதைத்தான் அனுபவிக்க துவங்கியிருக்கிறது எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. அரசு. 

மெஜாரிட்டியை இழந்து நிற்கும் எடப்பாடி அரசை பி.ஜே.பி.தான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது என்பது தமிழகத்தின் கடைக்கோடி வாக்காளனும் நம்பும் ஒரு ரகசியம். இதை மெய்ப்பிக்கும் விதமாகவே அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரது பேச்சுக்கள் அமைந்து வந்திருக்கின்றன. 

உள் மனதில் இருப்பதுதானே தன்னையும் அறியாமல் வெளியே வரும்! என்பது போல் இந்த அட்சி காலத்தின் எஞ்சிய வருடங்களை 2019 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வரை பிரச்னையில்லாமல் கொண்டு போய்விடலாம், ஒருவேளை பி.ஜே.பி.யே மீண்டும் ஜெயித்தால் பிரச்னையில்லை. அப்படியில்லாமல் போனால் விதி விட்ட வழி! எப்படியோ இன்னும் சுமார் 2 வருடங்களுக்கு பிரச்னையில்லை...என்ற நினைப்பில்தான் அ.தி.மு.க. அமைச்சரவை இருந்தது. அதற்கு ஏற்றார்போல்தான் மத்திய அரசின் பிரதிநிதியாக தமிழகத்தை சேர்த்து பொறுப்பு வகித்த கவர்னர் வித்யாசாகர் ராவ் இயங்கிக் கொண்டிருந்தார் என்றார்கள். 

ஆனால் தமிழகத்துக்கான கவர்னராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்ட பிறகு நிலைமை தலைகீழாய் மாறியிருக்கிறது. புரோஹித் இயல்பிலேயே பெரும் கோடீஸ்வரர். காசு பணம், அரசு பணத்தில் வசதியான வாழ்க்கையில் கோலோச்சுவதற்காக என்றெல்லாம் அரசியல் பாதைக்கு வராதவர். தமிழக கவர்னராக அவர் நியமிக்கப்பட்டதுமே அவரது ப்ரொஃபைலை எடுத்துப் பார்த்த தமிழகத்தை ஆளும் புள்ளிகளின் முகம் கறுத்தது. ஆனால் மூலவரான மோடி நம்மோடு இருக்கையில் வெறும் உற்சவரால் என்ன செய்துவிட முடியும்? என்று நினைத்தனர். 

இந்த நினைப்புக்குத்தான் ஆப்பு வைக்க துவங்கியிருக்கிறார் கவர்னர் புரோஹித். தனது முதல் அதிரடியாக தமிக ராஜ்பவன் செலவை மிக கணிசமாக குறைக்கும் நடவடிக்கையை எடுத்திருக்கிறார். சாப்பாடு, பெட்ரோல், டீசல் என்று எல்லா விஷயங்களிலும் இதுவரையில் கவர்னர்களாக இருந்தவர்களில் பலரின் குடும்பங்களும், ராஜ்பவன் ஊழியர்களும் ஏகபோகமாக செலவு செய்து வாழ்ந்திருக்கின்றனர். தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் தனியார் கல்லூரி விழாவுக்கு கூட கவர்னர்கள் அரசு செலவில் தனி விமானத்தில் சென்றிருக்கிறார்கள். அதிலும் குறிபாக வித்யாசாகர் ராவ்க்கு முன்னால் கவர்னராக இருந்த ரோசய்யா அண்ட்கோ செய்த செலவை பார்த்து புரோஹித்துக்கு ரத்தம் கொதித்துவிட்டதாம். அரசு பணம் என்பது  மக்களின் வரிப்பணம் என்கிற அடிப்படை பொறுப்புணர்வு கூட இல்லாமல் மிக மோசமாக அரசுப்பணம் மஞ்சக்குளிக்கப்பட்டிருக்கிறது. 

இவை அத்தனைக்கும் செம ஆப்பு வைத்திருக்கிறார் ரோஹித். தனது குடும்பத்தினர் ராஜ்பவனுக்குள் வந்தால் சில நாட்கள் மட்டுமே தங்க வேண்டும், அப்படி தங்கும் போது மிக சாதாரணமாகத்தான் செலவுகள் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார். தன் குடும்பத்துக்கே இப்படி கண்டிஷன் போட்டவர், நிரந்தரமாக ராஜ்பவனில் கோலோச்சும் ஊழியர்களின் ஆட்டத்திற்கு மூக்கணாங்கயிறு போடாமல் விடுவாரா? ராஜ்பவன் கிச்சனில் மாதத்தில் பல நாட்கள் அசைவ உணவு சமையல் அரங்கேறுவது வழக்கம். ஆனால் ‘இனி சைவ சமையல் மட்டுமே’ என்று இக்கு வைத்திருக்கிறாராம் புரோஹித். 

இதையெல்லாம் கேள்விப்பட்டு, சரி ராஜ்பவனுக்குள் அவர் எதுவும் செய்துவிட்டு போகட்டும்! பொழைக்க தெரியாத மனுஷன்! என்றுதான் தமிழக அமைச்சர்களில் சிலர் சிரித்திருக்கின்றனர். ஆனால் புரோஹித் இதோ அவர்களை நோக்கியும் நகர துவங்கிவிட்டார். 

இன்று கோயமுத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்பவர், இன்று மாலையே மாவட்டத்தின் முக்கிய அதிகாரிகளை சந்தித்து வளர்ச்சி பணிகள்  குறித்து ஆய்வு செய்கிறார். ஏதோ நாலு ஃபைலை காட்டினோம், ரெண்டு போட்டோக்களை காட்டினோம் என்றெல்லாம் இருக்கக் கூடாதாம். துறை வாரியாக முழு ரெக்கார்டுகளும் கவர்னரின் டேபிளில் வைக்கப்பட வேண்டும் என்பது ஆர்டர். நாளையும் கோயமுத்தூரில் ஸ்வச் பாரத் உள்ளிட்ட சில பணிகளை நேரில் ஆய்வு செய்வதோடு, மக்களோடும் கலந்தாலோசிக்கிறார். இந்த நேரத்தில் மாவட்ட நிர்வாத்தின் மீதும், ஆளும் அரசின் மீதும் மக்கள் குமுறிக் கொட்டினால் கிழிந்துவிடும் கிருஷ்ணகிரி என்பதே அ.தி.மு.க.வின் அலறல்.

தான் பணி நிமித்தமாக பல மாவட்டங்களுக்கு செல்லும் போது இனி இதே ஸ்டைலில் ஆய்வு செய்வதென்பதில் உறுதியாக இருக்கிறார். 

அப்படியானால் சென்னையில் என்ன செய்வார்? என்று கேட்டால் கோட்டைக்கு போகப்போகிறார். ஆம் தமிழக தலைமை செயலகத்தில் கவர்னருக்கென்று தனி அறை இருக்கிறது. இதுவரையில் பல கவர்னர்கள் அந்த அறையின் பக்கம் திரும்பிக் கூட பார்த்ததில்லை. 

ஆனால் புரோஹித் இனி அங்கே அடிக்கடி செல்லப்போகிறார். மாநில அளவிலான அரசுப் பணிகளை அங்கிருந்து ஆய்வு செய்யப்போகிறாராம். சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர், செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பரிவாரங்கள் கவர்னரிடம் ரிப்போர்ட் செய்ய வேண்டும் எனும் புதிய அஸைன்மெண்ட் வந்து விழப்போகிறதாம். முதல்வர், துணை முதல்வர்களும் இதற்கு தப்ப மாட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. 

சென்னையில் மழைவெள்ளம், நெல்லையில் கந்துவட்டி உள்ளிட்ட ஆயிரத்தெட்டு பஞ்சாயத்துகள் இருக்க, மாவட்டந்தோறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா எனும் பெயரில் அரசு செய்யும் செலவுகளை பற்றி இரு முதல்வர்களிடமும் டீடெயில் ரிப்போர்ட் கேட்க இருக்கிறார் புரோஹித் என்று ராஜ்பவன் அதிகாரிகள் கிசுகிசுக்கிறார்கள். 
இதுமட்டுமா!...அமைச்சர் பெருமக்களின் செலவு விஷயங்களிலும் இனி ஆடிட்டிங் அக்குபஞ்சர் நடத்தப்படுமாம். செலவை குறைக்க சொல்லி நடவடிக்கைகள் வரலாம் என்கிறார்கள். 

ஆக மொத்தத்தில் கோட்டை வட்டாரம் ஆடிப்போய் கிடக்கிறது. முதல்வர், துணை முதல்வர் முதல் அத்தனை அமைச்சர்களையும் புரோஹித் புலம்ப விட்டுள்ளார். 

பக்கத்து மாநிலமான புதுவையில் கிரண் பேடி, நாராயணசாமி அண்ட்கோவை புரட்டி எடுக்கும்போது ரசித்துப் பார்த்த எடப்பாடி கோஷ்டிக்கு இப்போது வயிறு கலங்கிக் கொண்டிருக்கிறது என்று சிரிக்கிறது தமிழக காங்கிரஸ். இதில் பியூட்டி என்னவென்றால் கிரண்பேடியை எதிர்த்து மிக தைரியமாக போராட்டம் செய்தது, செய்கிறது நா.சா.வின் குரூப். ஆனால் இங்கே பி.ஜே.பி. கவர்னரை எதிர்த்து பழனி, பன்னீர் கோஷ்டியால் ஒரு புல்லை கூட நகர்த்தி வைக்க முடியாது. காரணம், இவர்களின் சிண்டு முழுவதும் பி.ஜே.பி.யின் கையில். 
புரோஹித்தின் அதிரடிகள் தமிழக பா.ஜ.க.வினரை குஷியாக்கி இருக்கின்றனவாம்.

வெங்கய்யா நாயுடு ஒரு நாள் ஆய்வுக் கூட்டம் போட்டதுக்கு ஆளும் அ.தி.மு.க. அணியின் முகம் நொந்தது. இனி புரோஹித் வாராவாரம் ஆப்பு  ஆரவாரம் நடத்தினால் என்னவாகும்? என்று சிரிக்கிறார்கள். இதுமட்டுமல்ல, கவர்னர் புரோஹித் தான் இனி தமிழக அரசை கண்காணித்து, பணிகளை முடுக்கிவிட்டு நடத்தப் போகிறார் என்று சொல்லும் தமிழக பா.ஜ.க. அவரை ‘இ.சி.எம்.’ என்று அழைத்திருக்கிறது. 

அதென்ன இ.சி.எம். என்கிறீர்களா?.. ‘எக்ஸிகியூடிவ் சீஃப் மினிஸ்டர்’ அதாவது ‘செயல் முதல் அமைச்சர்’. முதல்வர், துணை முதல்வர், மறைமுக முதல்வர், மக்கள் முதல்வர் என்றெல்லாம் பெஞ்சை தேய்ப்பவர்களையும், பாலிடிக்ஸ் செய்பவர்களையும் பார்த்துப் பழகி வெறுத்த தமிழகத்துக்கு இந்த புரோஹித் புண்ணியம் செய்வாரா என்று பார்ப்போம். 
வந்த புதிதில் புலி போல் உறுமிவிட்டு அப்புறம் பூனையாக பம்மி படுத்துக் கொள்வாரா? என்றும் புரியவில்லை. 

click me!