உயிர்களைப் பறிக்கும் அதிவேக சூப்பர் பைக்குகளுக்கு தடை பண்ணுங்க... வேற லெவலில் யோசிக்கும் ராமதாஸ்..!

By vinoth kumarFirst Published Apr 22, 2021, 12:02 PM IST
Highlights

சூப்பர் பைக் விபத்துகளில் தங்களின் பிள்ளைகளை இழந்த பெற்றோர் அனுபவித்த, இன்னும் அனுபவித்துக் கொண்டிருக்கும் துயரங்களை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. ஆகையால், உடனே  உயிர்களைப் பறிக்கும் அதிவேக சூப்பர் பைக்குகளுக்கு தடை விதிக்க வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார். 

சூப்பர் பைக் விபத்துகளில் தங்களின் பிள்ளைகளை இழந்த பெற்றோர் அனுபவித்த, இன்னும் அனுபவித்துக் கொண்டிருக்கும் துயரங்களை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. ஆகையால், உடனே  உயிர்களைப் பறிக்கும் அதிவேக சூப்பர் பைக்குகளுக்கு தடை விதிக்க வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக  பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- விபத்துகளைத் தடுக்க இரு சக்கர வாகனங்களிலும் வேகக்கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொறுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. அதிவேக இரு சக்கர வாகனங்களில் சாகசம் செய்யும் தாகத்துடன் பயணிக்கும் இளைஞர்கள் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்பது அதிகரித்து வரும் நிலையில், இது மிகவும் பயனளிக்கக்கூடியதாகும்.

சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்ட இழப்பீட்டை உயர்த்தி வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணையின்போது, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் இந்த அறிவுரையை வழங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி, பள்ளிகளின் பாடத் திட்டத்தில் சாலை விதிகளை சேர்க்க வேண்டும்; அதிவிரைவுச் சாலைகளில் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் பயணிக்கலாம் என்ற ஆணையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். இவை அனைத்தும் இந்த தருணத்தில் மிகவும் தேவையான பரிந்துரைகள் ஆகும். இந்த யோசனைகளை பாமக கடந்த பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. இந்த யோசனைகளை பாமக வரவேற்கிறது.

உலகில் அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்து வரும் நிலையில், அனைத்துத் துறைகளிலும் அதன் தாக்கங்கள் தென்படுகின்றன. இருசக்கர வாகன உற்பத்தியும் அதற்கு விலக்கு அல்ல. ஒரு காலத்தில் இரு சக்கர வாகனங்களின் அதிகபட்ச வேகம் 60 கி.மீ. என்ற அளவில் தான் இருந்தது. அவற்றின் அதிகபட்ச இழுவைத் திறன் 100 சி.சி. என்பதாகத் தான் இருந்தது. அவற்றில் 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் தான் பயணிக்க முடியும். ஆனால், இப்போது 1340 சி.சி. திறன் வரை கொண்ட அதி நவீன சூப்பர் பைக்குகள் இந்திய சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ரூ.35 லட்சம் வரை விலை கொண்ட அவற்றில் மணிக்கு 400 கி.மீ வேகத்தில் கூட பறக்க முடியும். இது தான் ஆபத்தாக மாறியிருக்கிறது.

இன்றைய இளைய தலைமுறையினருக்கு சாகசம் செய்யும் மனப்போக்கு அதிகரித்து வருகிறது. அதற்கு தீனிபோடும் வகையில் சூப்பர் பைக்குகள் வந்திருப்பதால் இளைஞர்கள், அவற்றை வாங்கி அதில் அதிவேகத்தில் பறப்பதையும், அவ்வாறு பறப்பதில் கிடைக்கும் சாகச உணர்வை அனுபவிப்பதையும் காண முடிகிறது.
ஆனால், அதிவேகத்தில் பறக்கும் போது சாலையில் எதிர்பாராத சூழல்களை சமாளிக்க முடியாமல் விபத்துக்கு உள்ளாகின்றனர். சென்னையில் 18-வது பிறந்த நாளுக்கு தாய், தந்தையரை தொல்லை செய்து பரிசாக பெற்ற சூப்பர் பைக்கில் முதல் நாளிலேயே அதிக வேகத்தில் சென்று விபத்துள்ளான சிறுவன், கிழக்குக் கடற்கரைச் சாலையில் சட்டவிரோதமாக பந்தயம் நடத்தி, விபத்துள்ளாகி இறந்தவர்கள் என சூப்பர் பைக் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். சூப்பர் பைக் விபத்துகளில் தங்களின் பிள்ளைகளை இழந்த பெற்றோர் அனுபவித்த, இன்னும் அனுபவித்துக் கொண்டிருக்கும் துயரங்களை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது.

உலகிலேயே அதிக சாலை விபத்துகள் நிகழும் நாடு இந்தியா தான். இந்தியாவில் அதிக விபத்துகள் நிகழும் மாநிலம் தமிழ்நாடு தான். கடந்த 2019-ம் ஆண்டில் இந்தியாவில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 113. அவர்களில் 37%, அதாவது 56 ஆயிரத்து 136 பேர் இரு சக்கர வாகன விபத்துகளில் இறந்தவர்கள். இவர்களில் கணிசமானவர்களின் உயிரிழப்புக்குக் காரணம் சூப்பர் பைக்குகள் தான். தமிழ்நாட்டிலும் அதிக எண்ணிக்கையிலானவர்கள் சூப்பர் பைக் விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். அதிவேக பைக்குகளில் பயணம் செய்யும் அளவுக்கு நமது நாட்டு சாலைகள் இல்லாமை; அதிவேக பைக்குகளை சமாளிக்க முடியாதவை ஆகியவையே இதற்கு காரணம் ஆகும்.

சூப்பர் பைக்குகளை எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் இளைஞர்களை இயக்க அனுமதிப்பதும் விபத்துக்குக் காரணம் ஆகும். உதாரணமாக, சிங்கப்பூரில் 18 வயது இளைஞர்களுக்கு வழங்கப்படும் ஓட்டுநர் உரிமத்தைக் கொண்டு 100 சி.சி பைக்குகளை மட்டுமே ஓட்ட முடியும். 19 வயதில் 150 சி.சி. பைக்குகளையும், 20 வயதுக்கு மேல் 200 சிசி-க்கும் அதிக சக்தி கொண்ட பைக்குகளையும் இயக்க முடியும். ஆனால், தமிழ்நாடு உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் 18 வயது இளைஞர் ஓட்டுநர் உரிமம் கூட பெறாமல் எல்.எல்.ஆர் எனப்படும் பழகுநர் உரிமத்தை வைத்துக் கொண்டு 1,340 சி.சி பைக்குகளைக் கூட ஓட்ட முடியும். இத்தகைய அணுகுமுறை உடனடியாக மாற்றப்பட வேண்டும்.

இரு சக்கர வாகன விபத்துகளைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இரு சக்கர வாகனங்களிலும் வேகக்கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்த வேண்டும்; பள்ளிகளின் பாடத்திட்டத்தில் சாலை விதிகளை சேர்க்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அளித்துள்ள பரிந்துரைகள் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும். அத்துடன் பந்தயம் உள்ளிட்ட சில குறிப்பிட்ட தேவைகளைத் தவிர வேறு பயன்பாடுகளுக்கு அதிவேக சூப்பர் பைக்குகளை தடை செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, தொடக்கத்தில் சாதாரண வாகனங்களை ஓட்டி அனுபவம் பெற்ற பிறகு தான் கனரக வாகனங்கள் மற்றும் அதிவேக வாகனங்களை இயக்க அனுமதிக்கும் வகையில் ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான விதிகளை மாற்றியமைக்க வேண்டும்.

இவற்றுக்கெல்லாம் மேலாக பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு இத்தகைய இரு சக்கர வாகனங்களை வாங்கித் தராமல், மிதிவண்டிகளில் பயணம் செய்யும்படி ஊக்குவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு, உயிர்களைப் பறிக்கும் அதிவேக சூப்பர் பைக்குகளுக்கு தடை விதிக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

click me!