பெட்ரோல், டீசல் வாகனங்களுக்குத் தடையா ? மத்திய அரசின் அதிரடி முடிவு !!

By Selvanayagam PFirst Published Sep 6, 2019, 8:24 AM IST
Highlights

பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு, மத்திய அரசு தடை விதிக்க உள்ளதாக, அண்மைக்காலமாக வெளியான அதிர்ச்சி தகவலை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மறுத்துள்ளார். அப்படி ஒரு திட்டம் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

உலக அளவில், அதிக காற்று மாசு உள்ள நகரங்களின் பட்டியலில், டெல்லியும் இடம் பிடித்துள்ளது. இந்த பிரச்னையை சமாளிக்க, 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. டெல்லியின் காற்று மாசும் தற்போது, 29 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு, மத்திய அரசு தடை விதிக்க உள்ளதாக அண்மைக்காலமாக அதிர்ச்சி தகவல் பரவியது. இது உண்மையா ? என மக்கள் குழம்பிப் போயிருந்தனர்.

இந்நிலையில் டெல்லியில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, நம் நாட்டின், 'ஆட்டோமொபைல்' துறை, 4.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு கொண்டது. இதன் மூலம், பல லட்சம் பேர், வேலை வாய்ப்பு பெறுகின்றனர். ஏற்றுமதியும் உயர்ந்துள்ளது.

ஆனால், இதில் சில பிரச்னைகளை அரசு எதிர் கொண்டு வருகிறது. அதில் முதலாவதாக, கச்சா எண்ணெய் இறக்குமதி விலை உயர்வும், அடுத்ததாக, சுற்றுச்சூழல் மாசு அதிகரிப்பும் இருக்கிறது. இதற்கு, வாகனங்களை மட்டும் குறை சொல்ல முடியாது என்றாலும், சுற்றுச்சூழல் மாசுக்கு, 'ஆட்டோமொபைல்' துறையும் பொறுப்பேற்க வேண்டியது அவசியம்.

அதே நேரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு, மத்திய அரசு தடை விதிக்க உள்ளதாக, சமீபகாலமாக பேச்சு எழுந்துள்ளது. அப்படி எந்த திட்டமும், அரசிடம் இல்லை என்றும் நிதின் கட்கரி மறுத்தார்.

ஆட்டோமொபைல்' துறையில் ஏற்பட்டுள்ள சுணக்கம் குறித்து, அரசுக்கு கவலை உள்ளது. இது, வேலை வாய்ப்பு மற்றும் நாட்டின் வளர்ச்சியை கடுமையாக பாதித்துள்ளது. இதை சரி செய்ய, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 'ஆட்டோமொபைல்' துறையின் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு, கார்களுக்கான, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரியை குறைக்குமாறு, நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைக்கப்படும் என்றும் நிதின் கட்கரி தெரிவித்தார். 

click me!