பேனர் வைக்கத் தடை ! முதலமைச்சர் அதிரடி உத்தரவு !

By Selvanayagam PFirst Published Sep 13, 2019, 7:32 PM IST
Highlights

விபத்துகளைத் தடுக்க சாலைகளில் பேனர் வைப்பதற்கு தடை விதித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
 

சென்னை பள்ளிக்கரணையில்  அதிமுக. பிரமுகர் வைத்த பேனர் ஒன்று திடீரென சாலையில் சரிந்து விழுந்தது.அப்போது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற சாப்ட்வேர் என்ஜினீயர் அதில் சிக்கிக்கொண்டார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியது. இதில் அந்த இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழகத்தை போலவே புதுவையிலும் பேனர் கலாச்சாரம் இருக்கிறது. இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க புதுவையில் பேனர் வைப்பதற்கு தடை விதிப்பதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, தமிழகத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றிய பெண் சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில் லாரியில் சிக்கி இறந்துள்ளார். இது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

புதுவையில் இதுபோன்ற பேனர்கள் வைப்பது தவிர்க்கப்பட வேண்டும். புதுவை அழகாக இருக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். இதனால் அனுமதியின்றி அரசியல் கட்சியினரோ, தனி நபர்களோ பேனர் அமைக்கக்கூடாது. பேனர் வைப்பது விதிமீறிய செயல். பேனர் வைப்பவர்கள் மீது அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேனர்கள் அமைப்பதால் போக்குவரத்தில் பல அசம்பாவித சம்பங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே அதிகாரிகள் பேனர்கள் அமைப்பதை தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக உள்ளாட்சித் துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேனர்கள், கட்-அவுட்டுகளை உடனடியாக அகற்ற வேண்டும். பேனர், கட்-அவுட் அகற்றுவதற்கான செலவையும் பேனர் வைத்தவர்களிடம் பெற வேண்டும்.

அதிகாரிகள் பேனர்களை அகற்றாவிட்டால் அவர்கள் மீதும் நடவடிக்கை பாயும். இதை உள்ளாட்சித்துறை அமைச்சருடன் கலந்து பேசி முடிவெடுத்துள்ளோம். உள்ளாட்சித்துறை அமைச்சர் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

இன்று முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. உடனடியாக நகரம், கிராமப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பேனர்கள் அகற்றப்படும். நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து அனுமதியின்றி எந்த பேனரும் வைக்கக்கூடாது. மீறி வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நாராயணசாமி தெரிவித்தார்.

click me!