அதிமுகவும்- திமுகவும் ஒரே மேடையில் முடிச்சிடணும்... சவால்விடும் பாஜக நிர்வாகி..!

By Thiraviaraj RMFirst Published Sep 13, 2019, 5:59 PM IST
Highlights

அ.தி.மு.கவும், தி.மு.கவும் மக்கள் நலன் கருதி ஒரே மேடையில் உறுதி மொழி எடுப்பார்களா? என பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். 

அ.தி.மு.கவும், தி.மு.கவும் மக்கள் நலன் கருதி ஒரே மேடையில் உறுதி மொழி எடுப்பார்களா? என பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். 

இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘’பேனர் விழுந்த காரணத்தால் விபத்தில் இளம்பெண் உயிரிழந்த விவகாரம் பரபரப்பாக பேசப்படுகிறது. மிக கொடூரமான இந்த சம்பவத்தை கண்டிப்பதோடு, இதே வேகத்தில் இனி இது போன்று நடக்காது இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும்.

அச்சகத்தின் மீது சீல் வைத்து நடவடிக்கை என்பதெல்லாம் தவறு என்பதே என் கருத்து. இது நடந்திருப்பது ஒரு திருமண நிகழ்ச்சியில். ஒரு கட்சியை சார்ந்த ஒருவரின் இல்ல திருமண விழா எனும் போது, அந்த பேனரை வைத்தவரே இதற்கு பொறுப்பேற்க வேண்டும். ஆனால், ஊடகங்கள் இது குறித்து அதிகம் பேசுகின்றன. விவாதிக்கின்றன. பிரச்சினையின் வேர் எது என்று தெரிந்தும், தெரியாதது போல் இதை அணுகுவது வாடிக்கையாகி விட்டது.

 

அ.தி.மு.கவோ, திமுகவோ, பாஜகவோ, எந்த கட்சியாக இருந்தாலும் பேனர்கள் வைப்பது தவறு என்றும் மீறி வைத்தால் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும் முடிவெடுப்பது சரியானது. மேலும் இதன் மூலம் கட்சிகளில் உள்ள கோஷ்டி பூசல்கள் குறைவதோடு, உட்கட்சி பகை குறையும். குடும்பத்திற்கு செலவு செய்யாமல், பெருமைக்காக செலவு செய்யும் தொண்டர்களின் மனப்பான்மை மாறும். ஆனால் இந்த முடிவை யார் எடுப்பது? எப்படி எடுப்பது? எல்லா கட்சிகளும் ஒத்துழைக்குமா? என்பது போன்ற பல கேள்விகள் எழும். தமிழகத்தை பொறுத்த வரை, இரு பெரும் கட்சிகளான அ.தி.மு.கவும், தி.மு.கவும் வேகமாக இந்த முடிவெடுப்பது விவேகத்தை தரும். 

ஊடகங்கள் பல பெருகியிருக்கும் இந்த காலத்தில் பேனர்கள் மூலம் விளம்பரங்கள் அரசியல் கட்சி தலைவர்களுக்கு தேவையில்லை.
ஆகவே, முதல் முயற்சியாக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், தி.மு.க தலைவர் ஸ்டாலினும் ஒரே இடத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து இனி இரு கட்சிகளை சார்ந்தவர்கள் கட்சி நிகழ்ச்சிக்கு பேனர்களை வைப்பதில்லை. திருமண விழாக்களில் இது போன்ற பேனர்களை வைத்தால், வைத்தவர்களின் கட்சி பொறுப்பிலிருந்து நீக்குவோம் என்றும் உறுதி அளிக்கலாம்.

இப்படி செய்வதன் மூலம், மற்ற கட்சிகளும் இதை பின்பற்றுவது கட்டயாமாகி விடும் என் உறுதியாக நம்புகிறேன். இது போன்ற பேனர்கள், அந்தந்த பகுதி அரசியல் கட்சிகளின் குட்டி தலைவர்கள் தங்களை அடையாளப்படுத்தி கொண்டு அதிகாரம் செலுத்தவும் பயன்படுகிறது. அதே போல் கார்களில் கொடிகளை கட்டி செல்வதையும் தடை செய்வது அரசியல் அரஜாகத்தையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் குறைக்கும்.

ஊடக விவாதங்களில், பரபரப்புக்காக சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர், விமர்சகர்கள் என்றெல்லாம் அழைத்து நேரத்தை போக்கடிக்காமல், அரசியல் கட்சிகளை அழைத்து வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசுவதே பலன் தரும். அ.தி.மு.,கவும், தி.மு.க.,வும் மக்கள் நலன் கருதி ஒரே மேடையில் உறுதி மொழி எடுப்பார்களா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 

click me!