
மதச்சார்பற்ற ஜனதா தளத்துடனான கூட்டணியை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உறுதி செய்துள்ளார்.
கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளில் ஆர்.கே.நகர் மற்றும் ஜெயாநகர் தொகுதிகளை தவிர மற்ற 222 தொகுதிகளுக்கு கடந்த 12ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 40 வாக்கு எண்ணும் மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சி அதிகமான இடங்களில் முன்னிலை வகித்தது. பிறகு காங்கிரஸை பின்னுக்கு தள்ளி பாஜக அதிகமான தொகுதிகளில் முன்னிலை வகித்தது. ஒரு கட்டத்தில் காங்கிரஸ் மற்றும் மஜத ஆகிய கட்சிகள் முன்னிலை வகிக்கும் இடங்களை கூட்டி வருவதை விட அதிகமான இடங்களில் பாஜக முன்னிலை வகித்தது.
தனிப்பெரும்பான்மையாக பாஜக ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேரம் ஆக ஆக காங்கிரஸ் மற்றும் மஜத சில தொகுதிகளில் முன்னிலை வகிக்க ஆரம்பித்தன. பாஜக 106 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 73 தொகுதிகளிலும் மஜத 41 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. மற்றவை இரண்டு தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.
ஆட்சியமைக்க 113 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக தனி பெரும்பான்மையை எட்டவில்லை. ஆனால் காங்கிரஸும் மஜதவும் இணைந்தால் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியும். இந்நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியுடன் காங்கிரஸ் கட்சி சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
பின்னர் ஆசாத், சித்தராமையா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது பேசிய குலாம் நபி ஆசாத், மஜத தலைவர் தேவெ கௌடா மற்றும் குமாரசாமி ஆகியோருடன் தொலைபேசியில் பேசியே கூட்டணியை உறுதி செய்துவிட்டோம். காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் மஜத ஆட்சியமைக்க அவர்கள் ஒப்புக்கொண்டு விட்டனர். முதல்வர் யார் என்பது குறித்தும் மஜத முடிவு செய்யும் என ஆசாத் தெரிவித்துள்ளார்.