இரவில் 3 மணி நேரம் நீடித்த அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு... தேர்தலில் திமுக கூட்டணியைத் தோற்கடிக்க வியூகம்!

By Asianet TamilFirst Published Nov 22, 2020, 11:19 AM IST
Highlights

தமிழக தேர்தல் தொடர்பாக மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷாவுடன் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி நள்ளிரவு வரை ஆலோசனை நடத்தினார்.
 

அரசு விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தமிழக பாஜக நிர்வாகிகளைச் சந்தித்தார். கூட்டத்தில் அமித்ஷா தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து பேசியுள்ளார். அதேவேளையில் கட்சியினருக்கு பல ஆலோசனைகளையும் வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. “தமிழகத்தில் தேர்தல் கூட்டணியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் தேர்தல் பணிகளை கவனியுங்கள். ஒவ்வொரு பூத் கமிட்டியையும் வலுப்படுத்த வேண்டும். தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துங்கள். இப்போதிலிருந்து தொடர்ந்து பணியாற்றினால் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக ஆட்சியை கொண்டு வர முடியும்.” என்று அமித்ஷா பேசினார். 
இந்தக் கூட்டம் நிறைவு பெற்ற பிறகு இரவு 11 மணியளவில் துக்ளக் பத்திரிகை ஆசிரியரும் ஆடிட்டருமான குருமூர்த்தி அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பின்போது மாநில தலைவர் எல்.முருகன், பொதுச்செயலாளர் கே.டி. ராகவன் உள்ளிட்டோரும் இருந்துள்ளனர். இந்தச் சந்திப்பு சுமார் 3 மணி நேரம் வரை நீடித்துள்ளது. இந்த ஆலோசனையின்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து அமித்ஷாவும் குருமூர்த்தியும் ஆலோசனை நடத்தினர். நடிகர் ரஜினிகாந்த்தின் அரசியல் நிலைப்பாடு தொடர்பாகவும் இருவரும் ஆலோசித்தனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியை தோல்வியடைய செய்வதற்கான வியூகங்களை வகுப்பது தொடர்பாகவும் இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.
 

click me!