
அண்மையில் கைது செய்யப்பட்ட ராக்கெட் ராஜாவின் ஆதரவாளரின் ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவி வருகிறது. இந்த ஆடியோவில் முதலமைச்சர் மற்றும் நெல்லை எஸ்.பி.-க்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றர்.
நெல்லை, பாளையங்கோட்டை அண்ணா நகரைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரிப் பேராசிரியர் செந்தில்குமார் என்பவர், பிப்ரவரி 26 ஆம் தேதி வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், சம்பந்தப்பட்டவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்ட நாடார் மக்கள் சக்தி இயக்கத் தலைவரான ராக்கெட் ராஜாவை இந்த வழக்கில் நெல்லை போலீஸ் கைது செய்தது. ராக்கெட் ராஜாவை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராக்கெட் ராஜா கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்து நெல்லை, தாழையூத்து பகுதியில் கடந்த 15 ஆம் தேதி அரசுப் பேருந்துக்கு மர்ம நபர்கள் தீவைத்தனர். அந்த மர்ம நபர்கள், பயணிகளைக் கீழே இறங்கச் சொல்லிவிட்டு, பஸ்ஸூக்கு தீ வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஜோசப், ஆனந்த் ஆகியரை போலீசார் கைது செய்து, பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் ராக்கெட் ராஜா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, அவரது ஆதரவாளர் ஒருவர் வாட்ஸ் அப் மூலம் அச்சுறுத்தும் வகையில் பேசிய ஆடியோ
ஒன்று வெளியாகி உள்ளது. அதில், முதலமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அந்த ஆடியோவில், இதுவரை எத்தனை போலீசை போட்டிருக்கோம்... தெரியுமா உனக்கு? நாங்க நெனச்சா எந்த போலீசையும் போடுவோம்... நாங்க நினைச்சா சி.எம்.-ஐ கூட போட்டுருவோம். போன வருஷம், போலீஸ் ஜீப்-ல ஏத்திக்கிட்டு போன் சிங்காரத்த வெட்டினோம். இப்ப, எஸ்.பி. அருண் சக்திகுமார் இருக்குற தெம்புல சில பேர் ஆடுறாங்க... அவரையே போட்டுட்டா, நாங்க யாரை வேணும்னாலும் போடுவோம். எங்களை சட்டத்தால் யாரும் எதுவும் செய்ய முடியாது... என்று அந்த ஆடியோ பேச்சு உள்ளது.
இந்த ஆடியோ, சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவி வருகிறது. முதலமைச்சர், எஸ்.பி, ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த ஆடியோ தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.