மத்திய அமைச்சர் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்குதல்: கொல்கத்தா மாணவர்கள் ஆத்திரம்

By Selvanayagam PFirst Published Sep 19, 2019, 8:52 PM IST
Highlights

கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்துக்கு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றிருந்த மத்திய அமைச்சருக்கு எதிர்ப்புத் தெரிவித்த மாணவர்கள், அவர் மீறி வந்ததால், அவரின் தலைமுடியைப்பிடித்து இழுத்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது

மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பாபுல் சுப்ரியோ. கொல்கத்தா ஜாதவ்பூரில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி சார்பில் இன்று நடக்கும் நிகழச்சியில் பங்கேற்க சென்றார். ஆனால், அமைச்சர் பாபுல் சுப்ரியாவுக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் எஸ்எப்ஐ, அனைத்து இந்திய மாணவர் அமைப்பு ஆகியோர் எதிர்ப்புத் தெரிவி்த்து பல்கலைக்கழகத்துக்குள் வராமல் திரும்பிப்போகக் கூறினர்.

ஆனால், அதையும் மீறி மத்திய இணையமைச்சர் பாபுல் சுப்ரியா வந்தார். ஆனால், மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியாவைப் பார்த்தவுடன் கோஷமிட்டு எதிர்ப்புத் தெரிவித்த மாணவர்கள், அவரை உள்ளேவிடாமல் தடுத்தனர். மாணவர்களை மீறி பாதுகாவலர்கள் அமைச்சர் பாபுல் சுப்ரியை அழைத்துச் செல்ல முயன்றபோது மாணவர்கள் அவரின் தலைமுடியைப்பிடித்து இழுத்து தாக்கியதாகக்கூறப்படுகிறது.அதன்பின் அங்கிருந்து பாதுகாவலர்கள் அமைச்சர் சுப்ரியா மீட்டனர்.

இந்த சம்பவம் குறித்து பாபுல் சுப்ரியா கூறுகையில், “ நான் கடுமையாக மாணவர்களால் தாக்கப்பட்டேன் என் தலைமுடியைப் பிடித்து இழுத்து, என்னை முகத்தில் குத்தினார்கள், எட்டி உதைத்தார்கள். ஜாதப்பூர் பல்கலைக்கழக மாணவர்களிடம் இருந்து இதை முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. என்னிடம் ஏதாவது பிரச்சினை இருந்தால், மாணவர்கள் நேரடியாக பேசி இருக்கலாம். என்னை தாக்கி இருக்கக்கூடாது. நான் எங்கும் செல்லக்கூடாது என தடுக்க முடியாது. இதுதான் மேற்குவங்கத்தின் கல்வி முறை” எனத் தெரிவித்தார்

இருப்பினும், மாணவர்களுடன் வாக்குவாதம் செய்த அமைச்சர் பாபுல் சுப்ரியா நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு செல்ல முயன்றார். ஆனால், மாணவர்கள் பாஜகவை பல்கலைக்கழகத்துக்குள் விடமாட்டோம் என்று கூறி தடுத்தனர். ஆனால் அதையும் மீறி நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு அமைச்சர் பாபுல் சுப்ரியா சென்றார்.

நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு வெளியே மாணவர்கள் அமைச்சருக்கு எதிராக கோஷமிட்டு, ஆர்ப்பாட்டம் செய்தனர். நிகழ்ச்சி முடிந்து காரில் செல்ல முயன்ற மத்திய அமைச்சர் மீது மீண்டும் மாணவர்கள் தாக்குதல் நடத்தி அவர் அணிந்திருந்த கண்ணாடியை பிடுங்கி எறிந்தனர். அதன்பின் போலீஸார் தலையிட்டு அமைச்சரை அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்து மாநில ஆளுநர் ஜெகதீப் தங்கார் பல்கலைக்கழகத்துக்கு வந்து மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியாவை அழைத்துச் சென்றார். இந்த சம்பவம் குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும்,போலீஸாரும் விசாரித்து வருகின்றனர்

click me!