காடுவெட்டி குருவை வைத்து குளிர் காய்கிறார் !! ராமதாசை கிழித்து தொங்கவிட்ட திமுக !!

By Selvanayagam PFirst Published Sep 19, 2019, 8:27 PM IST
Highlights

பாமக ராமதாஸ் தான் பேச நினைத்ததை காடுவெட்டி குருவை வைத்து பேசவிட்டு குளிர் காய்பவர் என்றும், அவர் உயிருடன் இல்லாத நிலையில் குருவின் பெயரை பயன்படுத்தி செல்வாக்கை இழந்த பாமகவை உயிர்ப்பிக்க நினைக்கிறார் என அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் குற்றம்சாட்டியுள்ளார்.

பாமக சார்பில் மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குருவின் மணிமண்டப திறப்பு விழா அரியலூர் மாவட்டம் காடுவெட்டியில் நடைபெற்றது. அப்போது பேசிய ராமதாஸ் “குருவை வளர விடாமல் அவரை கொல்ல வேண்டும் என்று முயற்சி செய்தது அப்போது ஆண்டுகொண்டிருந்த திமுகவினர். இதற்காக பல்வேறு சதித் திட்டங்கள் தீட்டப்பட்டன” என்று பகீர் குற்றச்சாட்டை வைத்தார்.

இந்த நிலையில் ராமதாஸுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,வழக்கமாக தான் பேச நினைப்பதை, குருவை பேச வைத்து குளிர் காய்வது ராமதாஸின் வாடிக்கை. இப்போது குரு இல்லாத சூழலில், குரு பெயரை பயன்படுத்தி பாமகவை உயிர்ப்பிக்க நினைக்கிறார் என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

மேலும், “திமுக ஆட்சி நடைபெற்றது 2006- 2011 ஆம் ஆண்டு. எட்டு ஆண்டுகள் கழித்து இந்தக் குற்றச்சாட்டை சொல்லும் நோக்கம் என்ன? ஆதாரம் இருந்தால் காவல்துறையில் புகார் கொடுக்கலாமே?, குருவை கொல்ல திமுகவினர் திட்டம் தீட்டியிருந்தால் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் ஏன் திமுக உடன் கூட்டணி வைத்தீர்கள் ?குருவை கொல்ல திமுகவினர் திட்டம் தீட்டியிருந்தால், குரு எப்படி திமுக கூட்டணியில் போட்டியிட முன் வந்திருப்பார்” என்று ராமதாஸுக்கு  அவர் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியுள்ளார்.

குரு மறைவிற்கு பிறகு, பாமகவின் சரிவு தொடங்கி விட்டது. குரு உடல்நலம் குன்றி இருந்த நேரத்தில் ராமதாஸோ, அன்புமணியோ உதவவில்லை என்ற குற்றச்சாட்டு வன்னியர் சங்கத்தினராலேயே சொல்லப்பட்டது. கடைசி நாட்களில் மருத்துவ உதவி செய்தார் ராமதாஸ். 

ஆனால் அதை வன்னியர் சங்க இளைஞர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனுடைய வெளிப்பாடு தான் குரு மறைவுற்ற அன்று அன்புமணிக்கு காடுவெட்டி கிராமத்தில் காட்டப்பட்ட எதிர்ப்பு. அடுத்து குரு மறைவிற்கு திரண்ட இளைஞர்கள் கூட்டம் ராமதாஸை மிரள வைத்தது. 

பிற்காலத்தில் வன்னியர் சங்கம் என்றால் குரு என்ற அடையாளம் ஏற்பட்டு விடும் என்பதை உணர்ந்து கொண்டார். அதனால் குருவை புதைத்த இடத்தில் நினைவிடம் எழுப்பப்படாமல் அ.தி.மு.க அரசின் ஆதரவோடு தடுத்து விட்டார். வேறு இடத்தில் இப்போது நினைவு மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது எனவும் சிவசங்கர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதை எல்லாம் திசை திருப்பத் தான் இப்போது 'குருவை கொல்ல முயற்சி' என ஒரு அபாண்டமான குற்றச்சாட்டை சொல்கிறார். அதிலும் குருவுக்காக கூடிய இளைஞர்கள் கூட்டத்தை தக்க வைக்க தான், குருவின் மீது அக்கறையான இந்தப் பேச்சு” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குரு இறப்பிற்கான வன்னிய இளைஞர்களின் கோபத்திலிருந்து தப்பிக்க, தி.மு.க மீது பொய் புகார் கூறி சேற்றை அள்ளி இறைக்கிறார் ராமதாஸ்.இதை திமுக சட்ட ரீதியாக சந்திக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

click me!