பெண்ணின் தொடைகளில் பூட்ஸ் கால்களால் காவல் துறை அதிகாரி செய்த கொடுமை: பெண்கள் வாழத் தகுதியற்ற மாநிலமா இது.?

By Ezhilarasan BabuFirst Published Sep 30, 2020, 12:29 PM IST
Highlights

பாலியல் வன்கொடுமையாளர்கள் மற்றும் கொடுங்குற்றவாளிகள் சுதந்திரமாக எந்தத் தடைகளும் இல்லாமல் சுற்றிவர யோகி அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  
 

யோகி ஆதித்யாநாத்தின் பாஜக ஆட்சியில் உ.பி. மாநிலம் பெண்கள் வாழத் தகுதியற்ற வதைக்களமாக மாறிவிட்டது என எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து  அக்கட்சி தெரிவித்துள்ளதாவது. பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள், பாலியல் வன்முறைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் அடக்குமுறைகள் உ.பி. மாநிலத்தில் அளவுக்கு மீறி ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதோடு மட்டுமில்லாமல், பெண்களின் கண்ணியம் கேள்விக்குறி ஆக்கப்பட்டு வருகின்றது. பெண்கள் கண்ணியத்தோடு வாழத் தகுதியற்றதாக யோகியின் பாஜக ஆட்சியில் உ.பி. மாநிலம் மாறிவருகிறது. ஒவ்வொரு மணித்துளியிலும் இரண்டு பாலியல் வன்முறைகள், கற்பழிப்புகள்  நடந்தேறுவதாக வழக்குகள் பதிவாகும் நிலையில், உத்திரப்பிரதேசம் இந்தியாவில் குற்றங்களின் தலைமையகமாக மாறிவருவதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத்தலைவர் வழக்கறிஞர் ஷர்ஃபுதீன் அகமது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

உ.பி. மாநிலம், ஹர்தாஸ் என்ற இடத்தில் கல்நெஞ்சமுள்ள  கொடியவர்களின் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 19 வயது அப்பாவி தலித் சிறுமி நேற்று டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்த பரிதாப நிலை உ.பி. மாநிலத்தில் மீண்டும் தொடரக்கூடாது என்பதோடு, உ.பியில் நிகழ்ந்துவரும் அப்பாவி பெண்களுக்கு எதிரான தொடர் பாலியல் வன்கொடுமைகளுக்கு கடைசி நிகழ்வாக இது இருக்கவேண்டும்.  

அந்த தலித் சிறுமி உள்ளபடி கொடூரமாகக் கிழித்து கந்தலாக்கப்பட்டிருக்கிறார். அச்சிறுமி கொடூரங்களுக்கு உச்சமாக கழுத்து நெரிக்கப்பட்டு, நாவு துண்டிக்கப்பட்டு, முதுகுத் தண்டுவடம் மிக மோசமாக சேதமடையும் வகையில் கொடுமைகள் செய்யப்பட்டுள்ளார். படுகாயங்கள் அடைந்த சிறுமி இரு வாரங்கள் உயிருக்காகப் போராடி, துடிதுடித்து இறந்துள்ளார். கொடூரக் கொடுமைகளுக்கு ஆளாகி மரணமடைந்த அந்த சிறுமியின் மரணத்திற்கு 24 மணி நேரத்துக்குள்ளாகவே , உ.பி, ஹாமிர்பூரில் ஒரு தலித் பெண்ணின் தொடைகளில் உ.பி காவல்துறை அதிகாரி ஒருவர் பூட்ஸ் கால்களால் நசுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வலம்வரும் அவலம் அரங்கேறுகிறது. 

காவியுடை அணிந்து சாமியாராக வேஷம்போடும் மனிதநேயத்தை குழித்தோண்டி புதைத்த யோகியின் ஆட்சியில் மனிதநேயம் காணாமல் போய்விட்டதோடு, கொடுங்கோன்மை உ.பியின் அடையாளமாக மாறிவிட்டது.  கொடுங்கோல் ஆட்சி செய்துவரும் யோகி, மாநிலம் மற்றும் நாட்டிற்கு மட்டுமில்லாது அவர் பின்பற்றுவதாக பெருமைப்பட்டுக்கொள்ளும் சனாதன தர்மத்திற்கும் பெரும் களங்கமாக விளங்குகிறார். இறந்துபோன முஸ்லிம் முஸ்லிம் பெண்களின் உடல்களை கல்லறைகளிலிருந்து வெளியே எடுத்து கற்பழியுங்கள் என்று வெளிப்படையாகவே ஓலமிட்ட மதவெறியின் உச்சத்தைத் தொட்ட ஒருவரிடமிருந்து மனிதநேயத்தை எதிர்பார்ப்பது என்பது இயலாது. 

‘காட்டு தர்பார்’ என்ற சொல் உத்திரப்பிரதேசத்திற்கே பொருந்தும் என்பதை எவராலும் மறுக்கமுடியாது. இயற்கை நெறிமுறைகள், மனிதமாண்பு, மனிதநேயம் அனைத்தையும் குழித்தோண்டி புதைக்கப்பட்ட மாநிலமாக உ.பி. விளங்குகிறது.  மனிதர்களைக் காட்டிலும் பசுக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் மாநிலமாக உ.பி. மாறிவிட்டது.  பாலியல் வன்கொடுமை செய்வோரும், பெண்களை மானபங்கம் செய்வோரும் உ.பி. ஆட்சிக்கட்டிலை அலங்கரிப்போராக உள்ளனர். வெந்தபுண்ணில் வேலைப் பாய்ச்சுவது போன்று’சர்வார்ண பரிஷத்’ என்ற மதவெறிக்குழு, தலித் சிறுமியை சிதைத்து சின்னாபின்னமாக்கிய கொடியவர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளது.  வன்முறைகளைத் தூண்டுவோர், பாலியல் வன்கொடுமையாளர்கள் மற்றும் கொடுங்குற்றவாளிகள் சுதந்திரமாக எந்தத் தடைகளும் இல்லாமல் சுற்றிவர யோகி அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 

யோகி ஆட்சிக்கு வந்தபின் கொடிய குற்றங்களுக்கு சட்டங்கள் வழங்கும் தண்டனைகள் குறித்த பயம் அவர்களை விட்டுப் போய்விட்டது.மிகுந்த வேதனையையும், மனதை வாட்டக்கூடிய துன்பத்தைத் தரும் கொடுமையான நிகழ்வு என்னவெனில், இதே முறையில் படுகொலை செய்யப்பட்ட நிர்பயாவுக்காக வீதிகளில் இறங்கிப் போராடிய அந்த கூட்டு மனசாட்சி கொண்டவர்கள், இந்த அப்பாவி தலித் சிறுமிக்காக போராட வீதிகளில் இறங்காததுதான். பாலியல் வன்கொடுமைகளுக்கு இரையாகும் பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் சமூக, சாதிகள் கண்ணோட்டத்தில் பார்ப்பது வேதனையளிப்பதோடு மட்டுமல்ல, நாட்டிற்கு உண்டான கேவலமாகும் என்றும் வழக்கறிஞர் ஷர்ஃபுதீன் வேதனையைத் தெரிவித்தார்.
 

click me!