பதம்பார்க்கத் துடிக்கும் பாஜக... திமுகவின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி... இந்த முறையும் அதோகதிதானா..?

By Thiraviaraj RMFirst Published Sep 30, 2020, 12:17 PM IST
Highlights

‘யார்ரா அவன். அந்த நாயை தூக்கி வெளியே போடு எனக் கத்தினார். அவரது இந்தப்பேச்சை சகித்து கொள்ள முடியாத திமுகவினரே இப்போது, ஆ.ராஜாவை 2ஜி வழக்கில் தூக்கி உள்ளே போடு என சமூகவளைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

2ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்ற சிபிஐ கோரிக்கையை டெல்லி உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்திய அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஆ ராசா, கனிமொழி, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்ளிட்டோரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2017 ஆம் ஆண்டு விடுதலை செய்தது.

இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ அமலாக்கத் துறையும் கடந்த 2011 ஆம் ஆண்டு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தன. மிக முக்கியமான வழக்கு என்பதால் விரைந்து விசாரிக்க வேண்டும் என சிபிஐ தரப்பில் தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த கோரிக்கையை டெல்லி உயர் நீதிமன்றம் தற்போது ஏற்றுக் கொண்டுள்ளது. அதன்படி வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் தினசரி 2 ஜி மேல் முறையீட்டு மனு நடைபெறும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னதாக சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சைனி 7 ஆண்டுகளாக இந்த வழக்கை விசாரித்து வந்தார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததற்கான வலுவான ஆதாரங்களை தன்னிடம் யாராவது வழங்குவார்களா என ஏழு ஆண்டுகளாக காத்திருந்ததாகவும் தனது தீர்ப்பில் அவர் குறிப்பிட்டிருந்தார்.  4 லட்சம் பக்க ஆவணங்களை கொண்ட இந்த வழக்கை கையாண்ட இருதரப்பு வழக்கறிஞர்களுக்கும், நீதிபதி தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.

டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது ஒட்டுமொத்த திமுகவையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ‘’தேர்தல் நெருங்கும் நிலையில் மறுபடியுமா!’’என தலையிலடித்துக் கொள்கிறார்கள் அந்தக் கட்சியின் மூத்த நிர்வாகிகள். கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த வழக்கிலிருந்து திமுகவைச் சேர்ந்த கனிமொழி, அ.ராசா உள்ளிட்டவர்களை டெல்லி சிபிஐ தனி நீதிமன்றம் விடுவித்தது. இதனை எதிர்த்து சிபிஐ சார்பிலும், அமலாக்கத்துறை சார்பிலும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்த மனுக்களைத் தூசி தட்டி, வழக்கை விரைந்து விசாரணை செய்ய இரண்டு மத்திய அமைப்புகள் சார்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.


 இதனை ஏற்றுக்கொண்ட டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி பிரிஜேஷ் சேத்தி, வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நாள்தோறும் விசாரணை நடைபெறும் என அறிவித்துள்ளார். டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடி நடவடிக்கை ஒட்டுமொத்த திமுகவையும் உலுக்கியுள்ளது. கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் முக்கிய பேசு பொருளாக 2ஜி ஊழல் விவகாரம்தான் இருந்தது. ஏறத்தாழ 1 லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அப்போது மத்தியில் திமுக சார்பில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தவர் அ.ராசா என்ற வகையில் இந்த மெகா ஊழல் திமுகவிற்கு அழியாத களங்கத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அந்தத் தேர்தலில் நாடு முழுக்க காங்கிரசும், தமிழகத்தில் திமுக கூட்டணியும் மிகப் பெரிய தோல்வியை சந்தித்தன.
 
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் 2ஜி வழக்கு சூடுபிடிக்கத் தொடங்கியிருப்பது மீண்டும் அதே காட்சிகள் ரிப்பீட் ஆகுமோ! என்கிற நியாயமான சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக நம்மிடம் பேசிய திமுகவிலிருந்து சற்று ஒதுங்கியிருக்கும் மூத்த தலைவர் ஒருவர், ’’2014ல் மத்திய ஆட்சி அதிகாரம் என பாஜக இந்தளவிற்கு வலிமையோடு இல்லை. இப்போது அந்தக் கட்சி அசுர வலிமையோடு இருக்கிறது. இதனால் மீடியா உள்ளிட்டவற்றின் உதவியுடன் முன்பைவிட 2ஜி விவகாரத்தை மக்களிடையே கொண்டுசெல்ல வாய்ப்பு அதிகம் உள்ளது. கம்யூனிஸ்ட் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் 2ஜி ஊழலை மிகக் கடுமையாக எதிர்த்திருக்கின்றன. இப்போது அந்தக் கட்சிகள் எப்படி சப்பைக்கட்டு கட்டப் போகின்றன என்பதைப் பார்க்க வேண்டும்.
 
பாஜக பின்புலத்தில் 2ஜி ஊழல் தொடர்பான செய்திகள் மீண்டும் புயல் வேகத்தில் வெளிக் கிளம்பும்போது அதை சமாளிப்பது திமுகவிற்கு பெரும் சவாலாகவே இருக்கும்.  ஆக மொத்தத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கப் போவதாக கதை அளந்துவரும் திமுகவின் கழுத்தில் கத்தியை வைத்திருக்கிறது 2ஜி வழக்கு’’என்றார். இந்த நிலையில், பெரம்பலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராஜா பேசிக்கொண்டிருந்தபோது ‘ஆ.ராஜா வாழ்க என திமுக தொண்டர் ஒருவர் முழக்கமிட்டார். அதனை பொறுத்துக் கொள்ள முடியாத ஆ.ராஜா, ‘யார்ரா அவன். அந்த நாயை தூக்கி வெளியே போடு எனக் கத்தினார். அவரது இந்தப்பேச்சை சகித்து கொள்ள முடியாத திமுகவினரே இப்போது, ஆ.ராஜாவை 2ஜி வழக்கில் தூக்கி உள்ளே போடு என சமூகவளைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

click me!