அடேங்கப்பா.. மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு இவ்ளோ சொத்தா..? திகைக்க வைக்கும் பட்டியல்.!

By Asianet TamilFirst Published Oct 18, 2021, 9:13 PM IST
Highlights

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் தற்போதைய மொத்த சொத்து மதிப்பு ரூ.58.64 கோடி என்று லஞ்ச ஒழிப்புத் துறை பட்டியலிட்டுள்ளது.
 

முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி சோதனடை நடத்தினர். சென்னையில் கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு ஆகிய 2 இடங்களில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உதவியாளர்கள், உறவினர்கள் ஆகியோரது வீடுகளிலும் அதிரடி சோதனை நடைபெற்றது. விஜயபாஸ்கரின் சொந்த ஊர் புதுக்கோட்டையில் உள்ள இலுப்பூர். அங்கும் சோதனை நடத்தப்பட்டது. ஒரே நேரத்தில் 43 இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வேட்புமனு தாக்கல் பிரமாண பத்திரத்தில் தனது சொத்து மதிப்பு ரூ. 6.44 கோடி என்று தெரிவித்திருந்தார். ஆனால், அமைச்சராக இருந்த ஐந்து ஆண்டு காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.27 கோடிக்கு சொத்துக்களை வாங்கி விஜயபாஸ்கர் குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் எப்.ஐ.ஆரில் தெரிவித்துள்ளனர்.  விஜயபாஸ்கர் மட்டுமல்லாமல் அவருடைய மனைவி ரம்யா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
விஜயபாஸ்கர் 7 டிப்பர் லாரிகள், பி.எம்.டபிள்யூ கார் ஆகியவற்றை வாங்கி இருப்பதாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.எம்.டபிள்யூ காரின் மதிப்பு ரூ.53 லட்சம். டிப்பர்  லாரிகளின் மதிப்பு ரூ.6.58 கோடி. 85.12 பவுன் தங்க நகைகளை விஜயபாஸ்கர் குடும்பத்தினர் வாங்கியுள்ளனர். இதன் மதிப்பு ரூ.40.58 லட்சம். காஞ்சிபுரம் மாவட்டம் மொரப்பாக்கம், சில்லாவட்டம் பகுதிகளில் சுமார் ரூ.4 கோடி மதிப்பில் விவசாய நிலங்கள் உள்ளது எனவும்  சென்னையில் பகீரதி அம்மாள் தெருவில் உள்ள வீட்டின் மதிப்பு ரூ.14.57 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தற்போது விஜயபாஸ்கரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.58.64 கோடி.. 
இதற்கிடையே புதுக்கோட்டை இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனையில் ரூ.23.82 லட்சம் ரொக்கமும், 4.87 கிலோ தங்கம் (600 பவுன் தங்கம்), 3.8 கிலோ வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன உள்ளது என்று லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்துள்ளது. அதுதவிர, 136 கனரக வாகனங்களின் பதிவு சான்றிதழ்களும் கண்டறியப்பட்டுள்ளன என்றும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் தெரிவித்துள்ளது.  

click me!