அண்ணா பல்கலையில், பொறியியல் கலந்தாய்வுக்கான சான்றிதழ் பதிவேற்றம் இன்றுடன் நிறைவு: நாளை ரேண்டம் எண் வெளியாகிறது

By Ezhilarasan BabuFirst Published Aug 20, 2020, 12:05 PM IST
Highlights

பொறியியல் கலந்தாய்வுக்கான சான்றிதழ் பதிவேற்றம் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் நாளை ரேண்டம் எண் வெளியாக உள்ளது. 

பொறியியல் கலந்தாய்வுக்கான சான்றிதழ் பதிவேற்றம் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் நாளை ரேண்டம் எண் வெளியாக உள்ளது. பொறியியல் கலந்தாய்வுக்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கு நாளை ரேண்டம் எண் வெளியிடப்படுகிறது என அண்ணா பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.  அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு தமிழக உயர்கல்வித் துறை சார்பில் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. 

இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த ஜூலை 15-ல் துவங்கி ஆகஸ்ட் 16-ல் முடிவடைந்தது. அதில் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான இணையதள சான்றிதழ் பதிவேற்றமானது ஜூலை 31-ம் தொடங்கியது. இன்று மாலை வரை சான்றிதழ் பதிவேற்றம் செய்யலாம். இதுவரை ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர்.இன்றோடு சான்றிதழ் பதிவேற்றம் நிறைவடையும் நிலையில் நாளை முதல் அசல் சான்றிதழ் பதிவேற்றம் செய்து, கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு ரேண்டம் எண் வெளியிடப்பட உள்ளது. 

இந்த ரேண்டம் எண்ணை கொண்டு ஒரே மதிப்பெண்ணுடன் வரும் மாணவர்களுக்கு தர வரிசையில் முன்னுரிமை முடிவு செய்ய பயன்படும். ரேண்டம் எண் வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபார்க்கும் பணியானது வரும் 24 முதல் நடைபெறுகிறது. இந்த பணிகள் அனைத்தும் வரும் செப்டம்பர் 1க்குள் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

click me!