
தற்பொழுது ஸ்டாலின் இருக்கும் இடத்தில் அவரது அண்ணன் அழகிரி இருந்திருந்தால் அனைவரையும் ஆட்டிப் படைத்திருப்பார் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, அழகிரிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, ஸ்டாலின் குறித்து பேசுகையில் அவரையும் அண்ணன் அழகிரியையும் ஒப்பிட்ட அமைச்சர், அழகிரியை புகழ்ந்து பேசினார்.
ஜெயலலிதா எங்கு சென்றாலும் அழகிரியைப் பற்றியும் அவரது நடவடிக்கைகளைப் பற்றியும் பேசியிருக்கிறாரே தவிர ஸ்டாலினைப் பற்றி பேசியதில்லை. தகுதி இல்லாத யாரைப் பற்றியும் பேசமாட்டார் ஜெயலலிதா. அந்த வகையில், அழகிரியைப் பற்றி பேசியிருக்கிறார் என்றால் அழகிரிக்கு தகுதி இருக்கிறது என்றுதான் அர்த்தம். ஆனால் அதே நேரத்தில் திமுகவின் செயல் தலைவராக இருக்கும் ஸ்டாலினை பாவம் என்றுதான் ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே தவிர அவரைப் பற்றி பேசியதில்லை.
இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.
இதன்மூலம் அழகிரியை எளிதாக எடைபோடாத ஜெயலலிதா, அரசியலில் அவரைக்கூட ஒரு எதிரியாக நினைத்தாரேதவிர ஸ்டாலினை நினைக்கவில்லை என குறிப்பிடுகிறார் அமைச்சர்.
ஸ்டாலினை புறந்தள்ளும் நோக்கில் அழகிரியை புகழ்ந்து பேசியுள்ளார் அமைச்சர் ராஜூ. அழகிரியுடனான தான் குறித்த ஒப்பீட்டு மதிப்பீடு குறித்த அமைச்சரின் கருத்துக்கு விரைவில் ஸ்டாலின் பதிலளிக்கிறாரா? அல்லது அமைச்சரின் கருத்துக்கு பதில்கூறி தனது தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை என தெரிவிக்கிறாரா என்பதை பார்ப்போம்..