சட்டப்பேரவை நடந்தால்தான் அச்ச உணர்வு போகும்... சட்டப்பேரவையை ஒத்தி வைக்க மறுத்த எடப்பாடி!

By Asianet TamilFirst Published Mar 20, 2020, 10:18 PM IST
Highlights

சட்டப்பேரவையில் பலர் கூடியிருப்பதால் நோய் ஏற்படும் என்ற அச்சம் தேவையில்லை. சட்டப்பேரவை நடந்தால்தான் நாட்டின் நிலைமையை மக்களுக்கு எடுத்துச் சொல்ல முடியும். மக்கள் பிரச்சினைகளைப் பேச முடியும். அதற்காகத்தான் மக்கள் நம்மைத் தேர்ந்தெடுத்து அனுப்பியுள்ளனர். யாரும் அச்சப்பட வேண்டாம்.
 

தமிழகத்திலிருந்து ஒருவருக்கும் நோய் பாதிப்பு இல்லை. சட்டப்பேரவை நடந்துகொண்டிருந்தால்தான் மக்களின் அச்ச உணர்வை போக்க முடியும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழக சட்டப்பேரவையை ஒத்தி வைக்க வேண்டும் என்று அரசுக்கு எதிர்க்கட்சிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டன. இதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்தார்.


“கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றி எனது தலைமையில் நான்கு முறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நிலைமைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலாளர் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. மக்கள் கூடுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை 2 லட்சம் பயணிகள் பரிசோதிக்கப்பட்டு 32 பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைகள் உள்ளனர்.

பிரதமர் வெளியிட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக பின்பற்றி வருகிறது. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பணியாற்றும் அரசு அதிகாரிகள், பணியாளர்கள், மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள் என அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். சட்டப்பேரவையில் பலர் கூடியிருப்பதால் நோய் ஏற்படும் என்ற அச்சம் தேவையில்லை. சட்டப்பேரவை நடந்தால்தான் நாட்டின் நிலைமையை மக்களுக்கு எடுத்துச் சொல்ல முடியும். மக்கள் பிரச்சினைகளைப் பேச முடியும். அதற்காகத்தான் மக்கள் நம்மைத் தேர்ந்தெடுத்து அனுப்பியுள்ளனர். யாரும் அச்சப்பட வேண்டாம்.
தமிழகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. அமெரிக்கா, இத்தாலியில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கவில்லை. அதனால்தான் நோய் பரவியது. ஆனால், தமிழகத்திலிருந்து ஒருவருக்கும் நோய் பாதிப்பு இல்லை. சட்டப்பேரவை நடந்துகொண்டிருந்தால்தான் மக்களின் அச்ச உணர்வை போக்க முடியும்.” என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

click me!