58 வயசு எனக்கு என்னங்க ஆசை வரப்போகுது? மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்த டிடிவி.தினகரன்..!

By vinoth kumarFirst Published Mar 2, 2021, 7:46 PM IST
Highlights

அமமுக தலைமையை ஏற்றால் அதிமுக  பாஜகவுடன் கூட்டணி வைக்க தயார். ஆனால், அமமுக தலைமையை அதிமுக, பாஜக ஏற்காது. ஒருவேளை ஏற்றுக்கொண்டால் அதிமுக- பாஜகவுடன் கூட்டணி பற்றி அமமுக பேசத் தயார் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

அமமுக தலைமையை ஏற்றால் அதிமுக  பாஜகவுடன் கூட்டணி வைக்க தயார். ஆனால், அமமுக தலைமையை அதிமுக, பாஜக ஏற்காது. ஒருவேளை ஏற்றுக்கொண்டால் அதிமுக- பாஜகவுடன் கூட்டணி பற்றி அமமுக பேசத் தயார் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மே 2ம் தேதி முடிவுகள் வெளியாகிறது. தேர்தலுக்கு ஒரு மாத காலமே இருப்பதால், அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, பிரச்சாரம், தேர்தல் அறிக்கை தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

.இந்நிலையில், டிடிவி தினகரனின் அமமுக, அதிமுகவுடன் கூட்டணி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே, மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் அமமுக கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு, 'அமமுக வந்தால் வரவேற்போம்' எனமக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் சசிகலாவை அவருடைய தி.நகர் இல்லத்தில் இன்று சந்தித்த டிடிவி.தினகரன் ஆலோசனை நடத்தினார். 

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- எங்களுடைய ஒரே இலக்கு திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான். அதற்காகத்தான் நான் முயற்சிகளைச் செய்துகொண்டு வருகிறேன். இந்தக் கட்சி கூடாது, அந்தக் கட்சி கூடாது என்பதை விட திமுகவை எதிர்க்கின்ற அத்தனை கட்சிகளும் அமமுக தலைமையை ஏற்று வந்தால் இணைந்து செயல்படத் தயார்.

அப்படியெனில், திமுகவை தோற்கடிப்பதற்காக அதிமுக - பாஜக கூட்டணியுடன் இணைய தயார் என்று எடுத்துக் கொள்ளலாமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் எங்கள் தலைமையை ஏற்று எந்தக் கட்சி வந்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயார். நீங்கள் சில கட்சிகளைக் குறிப்பிட்டுச் சேர்க்கிறீர்கள். அதற்கு நான் பதிலளிக்க முடியாது. உங்கள் ஆசைக்காகச் சொல்கிறேன். யார் வந்தாலும் பேசத் தயார்.

அப்போது மீண்டும் குறுக்கிட்ட செய்தியாளர், 'எடப்பாடி பழனிசாமி துரோகி என்று முன்பு சொன்னீர்கள். இப்போது திமுகவை தோற்கடிக்க யார் வந்தாலும், எங்கள் தலைமையை ஏற்றால் கூட்டணி வைப்போம் என்று கூறுகிறீர்கள். அப்படியெனில், இ.பி.எஸ். உடன் பேச்சுவார்த்தைக்கு தயாரா?' என்று கேள்வி எழுப்ப, 'எங்க தலைமையை அதிமுக ஏற்காது என்பது தெரியும். நீங்கள் கேள்வி கேட்டீர்களே என்று உங்கள் ஆசைக்காத தான் அப்படி சொன்னேன். திருப்பித் திருப்பித் அதே கேட்குறீங்களே' என்று டிடிவி பதிலளித்தார்.

அப்போதும் விடாத செய்தியாளர், அப்படியெனில், அதிமுகவுடன் கூட்டணி வைக்க உங்களுக்கு ஆசை இல்லை என்று எடுத்துக்கலாமா? என்று கேட்க, சட்டென சிரித்த டிடிவி, '58 வயசுல எனக்கு என்னங்க ஆசை வரப் போகுது என்று பதிலளிக்க, செய்தியாளர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. 

click me!