வேகம் காட்டும் ஸ்டாலின்.. திமுக கூட்டணியில் இன்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை.. 2 கட்சிகளுக்கு அழைப்பு..!

By vinoth kumarFirst Published Feb 28, 2021, 11:10 AM IST
Highlights

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆகிய 2 கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கு திமுக தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆகிய 2 கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கு திமுக தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே அரசியல் கட்சிகள் பிரச்சாரம், கூட்டணி என பல்வேறு நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்தது. இதனால், அரசியல் கட்சிகள் கூட்டணிக்கான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. திமுக, கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆயத்தமாகி உள்ளது. அதற்கான அறிவிப்பை திமுக தலைமை வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில், கே.எம்.காதர் மொய்தீன் தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சி ஆகிய 2 கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கு திமுக தரப்பில் இருந்து இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. 

நாளை திமுகவின் மற்ற இரு கூட்டணிக் கட்சிகளான மதிமுக, விசிகவிற்கு கூட்டணி தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது. 

click me!