சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்... அரசியல் கட்சிகளுடன் சத்யபிரதா சாகு நாளை முக்கிய ஆலோசனை...!

By Kanimozhi PannerselvamFirst Published Feb 28, 2021, 10:31 AM IST
Highlights

இந்நிலையில் நாளை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் பதவிக்காலம் இன்னும் ஓரிரு மாதங்களில் நிறைவடைய உள்ளன. இரு தினங்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள தேதிகளை அறிவித்தார். 

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  வேட்புமனு தாக்கல் மார்ச் 12ம் தேதி முதல் மார்ச் 19ம் தேதி வரையிலும், வேட்புமனு பரிசீலினை மார்ச் 20ம் தேதியும், வேட்பு மனுக்களை திரும்ப பெற மார்ச் 22ம் தேதி கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களிலும் மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். கடந்த  26ம் தேதி முதலே தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. 

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. அரசியல் கட்சிகள் பிரச்சாரம், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாளை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் நாளை பிற்பகல் 12 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறும் என கூறப்படுகிறது. தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உள்ளிட்டவை குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 

click me!