40+1 அதிமுகவிடம் கெத்து காட்டிய தேமுதிக... ஆனால் 9+1 கைவிரித்த எடப்பாடியார்..!

By Selva KathirFirst Published Dec 15, 2020, 11:35 AM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தலில் நான்கு தொகுதிகள் ஒதுக்கியுள்ளோம் என்பதற்காக சட்டமன்ற தேர்தல் 41 தொகுதிகளை எதிர்பார்ப்பது நியாயம் இல்லை என்று தேமுதிகதரப்புக்கு அதிமுக தரப்பிடம் இருந்து பதில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் நான்கு தொகுதிகள் ஒதுக்கியுள்ளோம் என்பதற்காக சட்டமன்ற தேர்தல் 41 தொகுதிகளை எதிர்பார்ப்பது நியாயம் இல்லை என்று தேமுதிகதரப்புக்கு அதிமுக தரப்பிடம் இருந்து பதில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதத்திற்குள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்து முடிப்பது என்று அதிமுக மேலிடம் திட்டமிட்டுள்ளது. தேமுதிக, பாமக போன்ற கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக எடப்பாடி தரப்பில் இருந்து மிகுந்த சீரியசாக பேசிக் கொண்டிருக்கின்றனர் .அந்த வகையில் தேமுதிக தரப்பின் எதிர்பார்ப்பு என்ன என்று எடப்பாடி தரப்பு பிரேமலதாவிடம் சீரியசாக கேட்க அதற்கு சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் தங்களுக்கு 40+1= 41 தொகுதிகள் வேண்டும் என்று குண்டை தூக்கிப் போட்டுள்ளார்.

கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – தேமுதிக கூட்டணி முதன்முறையாக அமைந்தது. அப்போது தேமுதிகவிற்கு ஜெயலலிதா 41 தொகுதிகளை ஒதுக்கினார். இதனை சுட்டிக்காட்டி அதிமுக தரப்பிடம் தற்போதும் 41 தொகுதிகள் வேண்டும் என்று தேமுதிக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அத்தோடு மட்டும் அல்லாமல் எந்தெந்த 41 தொகுதிகள் தேவை என்பதையும் பிரேமலதா பட்டியலாகவே அதிமுக தரப்பிற்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த பட்டியலை மிகவும் சீரியசாக வாங்கி அதிமுக தரப்பு ஆய்வு செய்துள்ளது.

தேமுதிகவிற்கு தற்போதுள்ள வாக்கு வங்கி, அக்கட்சியின் நிர்வாகிகளின் எண்ணிக்கை, தொண்டர்கள் பலம் போன்றவற்றை எடப்பாடி பழனிசாமி தனது வியூக வகுப்பாளர் சுனில் டீம் மூலமாக ஆய்வு செய்துள்ளார். அத்தோடு உளவுத்துறை தரப்பிலும் தேமுதிகவின் செல்வாக்கு குறித்து ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டிருக்கிறார். இந்த இரண்டு ஆய்வுகளின் அடிப்படையில் தற்போதைய சூழலில் தேமுதிகவிற்கு 2 சதவீத வாக்குகள் விழுந்தால் அதிகம் என்கிற முடிவை இரண்டு பேருமே கொடுத்துள்ளதாக கூறுகிறார்கள்.

தேமுதிகவின் ஆரம்பகால தொண்டர்கள், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி கிராம ஊராட்சி செயலாளர்கள் வரை தான் தற்போது தேமுதிகவின் வாக்குவங்கி என்பதையும் சுனில் டீம் கண்டுபிடித்து கூறியுள்ளதாக சொல்கிறார்கள். அதோடு உளவுத்துறையின் அறிக்கையும் சுனில் டீமின் அறிக்கையும் கிட்டத்தட்ட ஒத்துப்போயுள்ளது. சொல்லப்போனால் தேமுதிக இந்த முறை தனியாக நின்றால் தொகுதிக்கு ஆயிரம் வாக்குகளை தாண்டுவதே சந்தேகம் என்கிற ரீதியில் அந்த அறிக்கையில் அம்சங்கள் இடம்பெற்று இருப்பதாக கூறுகிறார்கள்.

விஜயகாந்த் இந்த தேர்தலில் நிற்பது சந்தேகம், ஆனால் அவரது மூத்த மகன் விஜயபிரபாகரனை தேர்தலில் போட்டியிட வைக்க தேமுதிக முடிவு செய்துள்ளது. அந்த வகையில் அவர் எங்கு நின்றாலும் வெற்றி கடினம் தான் என்றும் உளவுத்துறை மற்றும் சுனில் டீம் எடப்பாடியிடம் அறிக்கை கொடுத்துள்ளது. தேமுதிகவின் பிரேமலதாவின் பிரச்சாரம் மீடியா வெளிச்சத்திற்கு உதவும் அதே சமயம் விஜயகாந்த் பிரச்சாரம் எடுபடாது என்பதையும் அவர்கள் எடுத்துக் கூறியுள்ளனர். இந்த அடிப்படையில் கணக்கு போட்டு தேமுதிகவிற்கு அதிகபட்சம் 10 தொகுதிகள் வரை கொடுக்கலாம் என்று எடப்பாடி தரப்பு முடிவுக்கு வந்துள்ளதாக கூறுகிறார்கள்.

இந்த தகவலை தேமுதிக தரப்பிடமும் வெளிப்படையாகவே அதிமுக தரப்பு சொல்லிவிட்டதாக கூறுகிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் நான்கு தொகுதிகள் கொடுத்த நிலையில் அந்த கட்சி வேட்பாளர்கள் டெபாசிட் இழந்ததையும் அப்போது சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும் தற்போதைய சூழலில் விஜயகாந்த் பிரச்சாரம் செய்ய முடியாத நிலையில் அதிமுகவால் தேமுதிகவிற்கு பத்து தொகுதிகள் தான் தர முடியும் என்று கூறப்பட்டுள்ளதால் பிரேமலதா அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறுகிறார்கள். அதே சமயம் பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த எண்ணிக்கை அதிகபட்சம் 16 அல்லது 18 தொகுதிகள் வரை மட்டுமே அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் 20 தொகுதிகள் கூட தேமுதிகவிற்கு வழங்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள்.

click me!